செய்திகள்

குமரி மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை- பாலமோரில் 6 செ.மீ. பதிவு

Published On 2018-09-21 12:40 GMT   |   Update On 2018-09-21 12:40 GMT
குமரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. அதிக பட்சமாக பாலமோரில் 6 செ.மீ. அளவுக்கு மழை கொட்டியது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்டத்தின் மலையோர கிராமங்களிலும், அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. அதன்பின்பு மழை ஓய்ந்திருந்த நிலையில் வங்க கடலில் நேற்று முன்தினம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்தது. அதற்கேற்ப குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று பிற்பகலுக்கு மேல் பரவலாக சாரல் மழை பெய்தது.

குமரி மேற்கு மாவட்டத்தின் மலை கிராமங்கள், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இந்த மழை கொட்டியது. இது மாவட்டத்தின் உள்புற பகுதிகளிலும் பெய்தது. அதிக பட்சமாக பாலமோரில் 6 செ.மீ. அளவுக்கு மழை கொட்டியது.
மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

பேச்சிப்பாறை- 23, பெருஞ்சாணி- 30.2, சிற்றார்- 13.2, திற்பரப்பு- 27.2, முள்ளங்கினாவிளை- 4, புத்தன் அணை- 31, நாகர்கோவில்- 6, பூதப்பாண்டி- 2.4, சுருளோடு- 15.2, கொட்டாரம்-11.6, மயிலாடி- 3.2, இரணியல்- 11, ஆனைகிடங்கு- 5.2, குளச்சல்- 4.6, கோழிப்போர் விளை- 11.

குமரி மாவட்டம் முழுவதும் பெய்த  மழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்தும் அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி  29.90 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 819 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 905 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 67.30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 589 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 233 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News