செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழாவில் மின்சாரம் தாக்கி 3 பேர் மரணம்

Published On 2018-09-14 11:08 GMT   |   Update On 2018-09-14 11:08 GMT
விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற மாணவர்கள் உள்பட 3 பேர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஜோலார்பேட்டை:

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ரெட்டியூரை சேர்ந்தவர் இளம்பாரதி. ஆட்டோ டிரைவர். இவரது மகன் ஆதித்யன் (வயது 11), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6 -ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு பூஜை நடந்தது.

அப்போது மின்விளக்குக்காக பொருத்தப்பட்டிருந்த மின்வயரை சிறுவன் ஆதித்யன் கையால் பிடித்துவிட்டான். இந்த நிலையில் மின்வயரில் கசிந்த மின்சாரம் ஆதித்யன் மீது பாய்ந்ததில் அவன் தூக்கி வீசப்பட்டான். உடனடியாக அவனை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே ஆதித்யன் இறந்து விட்டான். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் அருகே உள்ள பெருமாபட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் பிரதீப், அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அப்பகுதியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. மின் இணைப்பு மூலம் ஜொலிக்கும் விளக்குகள், ஒலிபெருக்கி பொருத்தப்பட்டிருந்தது.

அங்கு ஒலித்து கொண்டிருந்த பாடலுக்கு சிறுவன் பிரதீப் நடனமாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு அறுந்த கிடந்த மின்சார வயரை பிரதீப் எதிர்பாராதவிதமாக மிதித்து விட்டான். இதில் மின்சாரம் தாக்கியதில் சிறுவன் பிரதீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இது குறித்து குரிசிலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோளிங்கர் அருகே அருந்ததிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு (வயது 32). இவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் விநாயகருக்கு வண்ண விளக்குகளால் மின்அலங்காரம் செய்ய வயர்களால் அலங்கரித்து கொண்டிருந்தார்.

அப்போது மின்வயர் புளியமரத்தின் மீது பட்டு திடீரென்று தெருவில் செல்லும் அதிக உயர் மின்அழுத்தம் கொண்ட கம்பியில் பட்டது. இதனால் மின்சாரம் தாக்கி அன்பு சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News