செய்திகள்

வீடுகள் வழங்கும் விவகாரம்- திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

Published On 2018-09-12 12:04 GMT   |   Update On 2018-09-12 12:04 GMT
வீடுகள் வழங்கும் விவகாரம் தொடர்பாக திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி:

திருச்சி காந்திமார்க்கெட் அருகே கல்மந்தை காலனி உள்ளது. இந்த காலனியில் கடந்த 50 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு  வீட்டுவசதி வாரியம் மூலம்  64 நிரந்தர வீடுகள் கட்டித்தரப்பட்டன. மேலும் அப்பகுதியில் 130 தற்காலிக குடியிருப்புகள் அமைத்து  194 குடும்பத்தினர் வசித்து  வருகின்றனர்.

இந்நிலையில் குடிசை மாற்று வாரியம் இந்த வீடுகளை அகற்றிவிட்டு ரூ.34 கோடி மதிப்பில் 182 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள்  கட்ட உள்ளது. எனவே இப்பகுதியில் குடியிருப்பவர்களை வீடுகளை காலி செய்ய  6 மாத கால அவகாசம் கொடுத்தது. 

அதன் பேரில் காலிசெய்த வீட்டு உரிமையாளர்களுக்கு, புது வீடுகளை வழங்குவதற்காக அவர்கள் வீட்டின் முன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக்  கொண்டனர். அதன் பிறகு  கடந்த 2 மாதங்களுக்கு பின்  வீடுகள் இடிக்கப்பட்டன.

இதேபோல் செங்குளம்  காலனி மற்றும் ஜெயில் பேட்டை பகுதியில் வீட்டை காலி செய்த போது  அப்பகுதி மக்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

அதேபோல் இப்பகுதி மக்களுக்கும் தலா ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும்,இப்பகுதியில் வசித்த 194 குடும்பங்களுக்கும் வீடு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் டோக்கன் வழங்கவேண்டும், மேலும் போலியான முறையில் வீடு வழங்குவதற்கு பயனாளிகள் தேர்வு  நடைபெறுவதாக தகவல்கள் பரவுகிறது. 

எனவே இதில் மாவட்ட கலெக்டர் தலையிட்டு முன்பு இப்பகுதியில் வசித்தவர்களுக்கு வீடு வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று 12-ந் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு பகுதி செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர்  ராஜா, செயற்குழு ஜெயபால்,  ராமர் மற்றும் மணிமாறன் மற்றும் கல்மந்தை காலனி பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News