செய்திகள்

மாதவராவை நேரில் அமர வைத்து டி.எஸ்.பி. - இன்ஸ்பெக்டரிடம் விசாரிக்க சி.பி.ஐ. திட்டம்

Published On 2018-09-12 10:04 GMT   |   Update On 2018-09-12 10:04 GMT
குட்கா ஊழல் தொடர்பாக மாதவராவை நேரில் அமர வைத்து டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டரிடம் விசாரிக்க நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். #GutkhaScam
குட்கா ஊழலில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளையும் அடுத்தடுத்து கைது செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.

முதல்கட்டமாக மதுரை ரெயில்வே டி.எஸ்.பி. மன்னர் மன்னன், தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சி.பி.ஐ. காவலில் உள்ள மாதவராவ் உள்ளிட்ட 5 பேரும் வருகிற 14-ந்தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். அதற்குள் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் டி.எஸ். பி.க்கும், இன்ஸ்பெக்டருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதனை ஏற்று இருவரும் இன்று காலை 10 மணி அளவில் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து ஏராளமான பத்திரிகையாளர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகம் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

ஆனால் எதிர்பார்த்தப்படி டி.எஸ்.பி. மன்னர்மன்னனும், இன்ஸ்பெக்டர் சம்பத்தும் வரவில்லை. இதன் பிறகே மாதவராவை சி.பி.ஐ. அதிகாரிகள் குடோனுக்கு அழைத்து சென்றனர்.

மாதவராவின் சி.பி.ஐ. காவல் இன்னும் 2 நாளில் முடிவடைய உள்ளதால் அதற்கு முன்னர் போலீஸ் அதிகாரிகள் இருவரையும் நேருக்கு நேர் வைத்து விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.

இதற்காக பல்வேறு கேள்விகளுடன் சி.பி.ஐ. அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். இன்று மாலை அல்லது நாளை டி.எஸ்.பி. மன்னர் மன்னனும், இன்ஸ்பெக்டர் சம்பத்தும் நேரில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குட்கா ஊழல் குறித்து அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சரமாரியாக கேள்விகளை கேட்க உள்ளனர். இதற்கு அவர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் உயர் போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

டி.எஸ்.பி. மன்னர்மன்னர், இன்ஸ்பெக்டர் சம்பத் இருவரும் விசாரணைக்கு ஆஜராகும் போது கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

குட்கா ஊழல் பற்றி இருவரிடமும் விசாரணை நடத்தும்போது உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பும் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. #GutkhaScam

Tags:    

Similar News