செய்திகள்

சென்னை புறநகரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் பூட்டை உடைத்து திருடிய என்ஜினீயர் கைது

Published On 2018-09-11 22:29 GMT   |   Update On 2018-09-11 22:29 GMT
சென்னை புறநகரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்த ஆந்திர மாநில கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 130 பவுன் தங்கநகை மீட்கப்பட்டது. #EngineerArrest #GoldTheft
ஆலந்தூர்:

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் கடந்த ஓராண்டாக அடிக்கடி அடுக்குமாடி குடியிருப்புகளில் பூட்டை உடைத்து தொடர்ந்து நகை கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் தென்சென்னை இணை கமிஷனர் மகேஸ்வரி மேற்பார்வையில் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி தலைமையில் மடிப்பாக்கம் உதவி கமிஷனர் கெங்கைராஜ், ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர் முரளி உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது வேளச்சேரி உள்வட்ட சாலையில் நடந்து சென்றவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டவரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் பிடிபட்டவர் ஆந்திர மாநிலம் சித்தூர் யாதமாரி கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் மதன்குமார் (வயது 29) என்பது தெரியவந்தது. இவர் சென்னை கோடம்பாக்கத்தில் தங்கி இருந்தார். இதனையடுத்து மதன்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

போலீசாரிடம் மதன்குமார் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படித்து உள்ளேன். சரியான வேலை எதுவும் கிடைக்கவில்லை. மேலும் உல்லாசமாக வாழ ஆசைப்பட்டேன். ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வேலைக்கு செல்லும் தம்பதிகளின் வீடுகளை நோட்டமிட்டேன். அங்கு வீடுகளின் பூட்டை உடைத்து திருடியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டேன்.

வீடுகளில் திருடிய நகைகளை உருக்கி விற்று அதில் வரும் பணத்தில் தாய்லாந்து சென்று அங்குள்ள மசாஜ் சென்டர்களில் உல்லாசமாக இருப்பேன். சென்னையில் உள்ள வேலைக்கு செல்பவர்கள் வசிக்கும் பகுதிகள் எது? என்று இன்டர்நெட் மூலமாக தேடினேன். அப்போது ஆதம்பாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி பகுதிகளை காட்டியது.

இதையடுத்து கடந்த ஓராண்டாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் பூட்டை உடைத்து தங்கநகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து அவற்றை விற்று தாய்லாந்து சென்று உல்லாசமாக இருந்து வந்தேன். வழிப்பறியில் ஈடுபட்டபோது போலீசாரிடம் சிக்கி விட்டேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மதன்குமாரிடம் இருந்து 130 பவுன் தங்க நகைகள், 2½ கிலோ வெள்ளிப்பொருட்களை போலீசார் மீட்டனர். மேலும் மதன்குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News