செய்திகள்

கல்பாக்கம் அருகே தனியார் கல்லூரி பஸ்சில் தலை உரசி பள்ளி மாணவன் பலி

Published On 2018-09-11 22:59 IST   |   Update On 2018-09-11 22:59:00 IST
கல்பாக்கம் அருகே சாலையில் உள்ள பள்ளத்தில் இறங்கியதால் ஆட்டோ குலுங்கியது. அதில் ஓரமாக அமர்ந்து பயணம் செய்த 1-ம் வகுப்பு மாணவனின் தலை எதிரே வந்த தனியார் கல்லூரி பஸ்சில் உரசியதில் பரிதாபமாக இறந்தான்.
கல்பாக்கம்:

காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் வெற்றிவேல்(வயது 7). இவன், கல்பாக்கம் அணுசக்தித்துறை ஊழியர் குடியிருப்பில் உள்ள கேந்திரவித்யாலயா-1 பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று காலை வெற்றிவேல், சகமாணவர்களுடன் ஆட்டோவில் கடலூர் கிராமத்தில் இருந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான். ஆட்டோவில் பின்இருக்கையின் ஓரத்தில் மாணவன் வெற்றிவேல் அமர்ந்து இருந்தான்.

கல்பாக்கம் அடுத்த காத்தான்கடை கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் ஆட்டோ வந்தபோது எதிரே தனியார் கல்லூரி பஸ் ஒன்று கடலூர் கிராமம் நோக்கி வந்தது. அந்த பகுதியில் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் வளைவில் திரும்பும்போது சாலையில் உள்ள பள்ளத்தில் இறங்கியதால் ஆட்டோ குலுங்கியது.

இதனால் ஆட்டோவில் ஓரமாக அமர்ந்து பயணம் செய்த மாணவன் வெற்றிவேலின் தலை வெளியே நீண்டது. அப்போது எதிரே வந்த கல்லூரி பஸ், ஆட்டோவில் உரசியபடி சென்றதால் பஸ் மீது மாணவனின் தலையும் உரசியதால் படுகாயம் அடைந்தான்.

இதையடுத்து மாணவன் வெற்றிவேலை மீட்டு கல்பாக்கம் அணுசக்தி துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவன் வெற்றிவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஆட்டோவில் இருந்த மற்ற மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பாக கூவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 
Tags:    

Similar News