செய்திகள்

10-ந் தேதி நடக்கும் பொது வேலை நிறுத்தத்துக்கு மதிமுக ஆதரவு- வைகோ பேட்டி

Published On 2018-09-08 11:22 GMT   |   Update On 2018-09-08 11:43 GMT
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து 10-ந் தேதி நடக்கும் பொது வேலை நிறுத்தத்துக்கு மதிமுக ஆதரவு தெரிவித்து பங்கேற்கும் என்று வைகோ தெரிவித்துள்ளார். #vaiko #petroldiesel

ஈரோடு:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று ஈரோடு வந்தார். ஈரோடு மூலக்கரையில் வருகிற 15-ந் தேதி ம.தி.மு.க. மாநாடு நடைபெறும் இடத்துக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் கட்சி அலுவலகத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ம.தி.மு.க. 25-வது ஆண்டு வெள்ளி விழா, தந்தை பெரியார், அண்ணா பிறந்த நாள் விழா, பொது வாழ்வில் 50 ஆண்டுகள் நிறைவு பொன்விழா என முப்பெரும் விழா ம.தி.மு.க. மாநில மாநாடு வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இது எங்களது 2-வது மாநில மாநாடாகும். ஏற்கன 1995-ம் ஆண்டு திருச்சியில் முதல் மாநில மாநாடு நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பங்கேற்றார்.

ஈரோட்டில் நடைபெறும் ம.தி.மு.க. மாநாட்டில் தி. மு.க. தலைவராக பொறுப் பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அன்றைய தேதியில் விழுப்புரத்தில் தி.மு.க. சார்பில் நடைபெறும் விழாவில் அவர் கலந்து கொள்ள உள்ளார். எனவே அவர் சார்பாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

மாநாட்டுக்கு மாநில அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்குகிறார். பொருளாளர் கணேசமூர்த்தி தொடக்கவுரையாற்றுகிறார். மாநாட்டில் கொடியேற்றுதல், கண்காட்சி திறப்பு, கருணாநிதி உருவ படம் திறப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

காலையில் நடைபெறும் விழாவில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கலந்து கொள்கிறார். திராவிடர் கழக தலைவர் வீரமணி பொன் விழா மலரை வெளியிடுகிறார். தி.மு.க. கூட்டணி கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

சரத்பவார், யஷ்வந்த் சின்கா, திருநாவுக்கரசர், பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், காதர் மொய்தீன் ஜவாஹீருல்லா, நடிகர் சத்யராஜ் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாநாட்டு பணி கடந்த 2 மாதமாக நடந்து வருகிறது. பொருளாளர் கணேசமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் முருகன், குழந்தைவேலு ஆகியோர் இரவு, பகலாக பணிகளை செய்து வருகிறார்கள். இந்திய அரசியலில் முக்கிய நகர்வுகள் நடந்து வரும் சூழ்நிலையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

மத்திய அரசு இந்தி திணிப்பு, சமஸ்கிருதம் திணிப்பு போன்றவற்றில் ஈடு படுகிறது. ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் மத்திய அரசு செயல்படுகிறது. நீட் தேர்வு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற துயரங்களை தமிழகம் சந்தித்து வரும் இந்த வேளையில் இந்த மாநாடு நடக்கிறது.

மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட உள்ளன. இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் வர உள்ளனர். மாநாடு நடைபெறும் இடத்துக்கு கலைஞர் நகர் என பெயர் சூட்டியுள்ளோம். கருணாநிதிதிரு உருவ படத்தை துரைமுருகன் திறந்து வைக்கிறார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது ஏழை, நடுத்தர மக்கள் மாத சம்பளம் வாங்கும் குடும்பத்தினர் அடித்தட்டு மக்கள் தலையிர் நேரடியாக விழுந்துள்ளது. இதை கண்டித்து காங்கிரஸ் வருகிற 10-ந்தேதி பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்கும்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வதாக நரேந்திர மோடி கூறுகிறார். இதை ஏற்க முடியாது. உற்பத்தி வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. 9.20 ரூபாயாக இருந்த உற்பத்தி வரியை 19.40 ரூபாயாக உயர்த்தி உள்ளது. இதே போன்ற டீசல் உற்பத்தி வரி 3.44 ரூபாயாக இருந்தது. தற்போது அதை 15.37 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. மாநில அரசும் தன் பங்குக்கு மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி உள்ளது.

ஸ்டெர்லைட் பிரச்சினைக்காக நான் 22 வருடமாக போராடி வருகிறேன். 2010-ம் ஆண்டு நான் ஸ்டெர் லைட் ஆலைக்கு எதிராக தடையாணை வாங்கி செயல் படவிடாமல் தடுத்தேன். ஆனால் அந்த நிர்வாகம் மேல்முறையீடு செய்த ஸ்டெர்லைட் செயல்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மக்கள் பல போராட்டம் நடத்தி100-வது நாளாக மனு கொடுக்க சென்றனர். இதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மத்திய அரசு திட்டமிட்டு மாநில அரசு மூலம் இந்த அடக்கு முறையை நடத்தியுள்ளது.

மாணவி சோபியா தனது கருத்துரிமையை வெளிப்படுத்தும் வகையில் விமானத்தில் பேசியுள்ளார். எனவே அவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், மனிதாபிமானத்தோடும் சகோதரி தமிழிசை இந்த வி‌ஷயத்தில் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை பிரச்சினையில் நானும், பழ நெடு மாறனும் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். அவர்களுக்கு தூக்கு தண்டனை தேதி அறிவித்து பல்வேறு போராட்டத்துக்கு பிறகு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

சமீபத்தில் அவர்களை விடுதலை செய்ய தமிழக கவர்னருக்கு அதிகாரம் என்று கோர்ட்டு கூறியுள்ளது. எனவே தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக அமைச்சரவையை கூட்டி 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குட்கா ஊழலில் தமிழக டி.ஐ.ஜி., சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் அவர்களை பதவியில் இருந்து முதல்-அமைச்சர் நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது பொருளாளர் கணேசமூர்த்தி, மாநகர மாவட்ட செயலாளர் முருகன், கிழக்கு மாவட்ட செயலாளர் குழந்தைவேலு, மாநில அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, இலக்கிய அணி யுவராஜ்குமார், நிர்வாகி சாதிக் உள்பட பலர் உடன் இருந்தனர். #vaiko #petroldiesel

Tags:    

Similar News