செய்திகள்

பிளாஸ்டிக் ஒழிப்பில் ஆர்வம் இல்லாத போலீஸ் அதிகாரிகள்

Published On 2018-09-06 14:47 GMT   |   Update On 2018-09-06 14:47 GMT
திண்டுக்கல் சீலப்பாடி மைதானத்தில் பிளாஸ்டிக் மலைபோல் குவிந்து கிடப்பதால் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளையும் சிரமத்தில் ஆழ்த்துகிறது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இதனை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஓட்டல்கள், வணிக வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்தினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

பொதுமக்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடை பெறும் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு வரும் மக்களிடமும் பிளாஸ்டிக் பொருட்களை உள்ளே கொண்டு வரக்கூடாது என சோதனை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் சீலப்பாடி மைதானத்தில் கடந்த 3-ந் தேதி முதல் போலீஸ் பணிக்கான உடல் தகுதித் தேர்வு நடந்து வருகிறது. இப்பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ் அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் திண்டுக்கல்லில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து உணவு கொண்டு வரப்படுகிறது.

உணவு சாப்பிட்ட பின் பிளாஸ்டிக் கழிவுகளை டி.ஐ.ஜி. அலுவலகம் முன்பாகவே அதிகாரிகள் கொட்டியுள்ளனர். அவை கடந்த 4 நாட்களாக மலைபோல் குவிந்துள்ளது.

4 வழிச்சாலையில் குப்பைகள் கிடப்பதால் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளையும் சிரமத்தில் ஆழ்த்துகிறது. பிளாஸ்டிக் ஒழிப்பில் அனைத்து அரசு துறை அதிகாரிகளும் தீவிரமாக களம் இறங்கியுள்ள நிலையில் போலீஸ் அதிகாரிகள் மட்டும் அக்கறையின்றி செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News