செய்திகள்

மாணவிகள் துப்பட்டாவால் முகத்தை மூடக்கூடாது - அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி கட்டுப்பாடுகள்

Published On 2018-09-06 06:44 GMT   |   Update On 2018-09-06 06:44 GMT
பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவ-மாணவிகள் கைக்குட்டை மற்றும் துப்பட்டா போன்றவற்றால் முகத்தை மூடி வாகனத்தில் வரவோ, நடமாடவோ கூடாது என்று அண்ணா பல்கலைக்கழகம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. #AnnaUniversity
சென்னை:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ. மற்றும் பி.டெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பாடங்களை படிக்கும் முறை ஆகியவை குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ‘ராக்கிங்’ செய்யாமல் தடுக்கும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.



அண்ணா பல்கலைக்கழகத்தின், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கட்டடவியல், கலை படிப்புகளுக்கான ஆர்கிடெக்ட் கல்லூரி வளாகங்களில் ராக்கிங் தடுப்பு வாகனம் ரோந்து வர உத்தரவிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் வளாகத்தில், ராக்கிங் தடுப்பு குழுவினர் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மாணவ-மாணவிகளுக்கு ஒழுக்கம் தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

வளாக பகுதிகளில் அரட்டை அடித்து நேரத்தை வீணடிக்கக்கூடாது, வகுப்புகளை புறக்கணிக்காமல் பங்கேற்க வேண்டும். மாணவ-மாணவிகளிடம் ராக்கிங் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் காதில் ஹெட்போன் கருவி அணிந்து வரக்கூடாது, மொபைல் போன் ஹெட்செட்டை கல்லூரி வளாகத்தில் பயன்படுத்தக்கூடாது.

மாணவ-மாணவிகள் கைக்குட்டை மற்றும் துப்பட்டா போன்றவற்றால் முகத்தை மூடி வாகனத்தில் வரவோ, நடமாடவோ கூடாது. வாகனத்தில் வரும்போது ஹெல்மெட் அணிந்திருந்தால் அதில் முகத்தை மூடும் கண்ணாடியை திறந்து விட்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு மாணவியும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். பேராசிரியர்களும் பல்கலைக்கழக ஊழியர்களும், காவலாளிகளும் அடையாள அட்டையை காட்டச் சொன்னால் மறுப்பு தெரிவிக்காமல் காட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. #AnnaUniversity

Tags:    

Similar News