செய்திகள்

இடைத்தேர்தலில் போட்டியிட எங்களுக்கு தயக்கம் இல்லை- கமல்ஹாசன்

Published On 2018-08-30 19:00 GMT   |   Update On 2018-08-30 19:00 GMT
இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
ஆலந்தூர்:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அதிகத்தூர் கிராமத்தை தத்து எடுத்ததில் இருந்து பணிகள் நடைபெற்று வருகிறது. மழைபெய்து உள்ளதால் தண்ணீர் தொடர்பான பணிகள் செய்ய முடியவில்லை. கழிப்பறைகள் கட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்கான பணிகள் செய்ய அரசாங்கத்திடம் அனுமதி கேட்டு உள்ளோம்.

100 கழிப்பிடங்கள் கட்ட எவ்வளவு நாள் தேவைப்படுமோ அதற்குள் கட்டப்படும். அதற்கு மேல் ஆகாது. அரசு அனுமதி தந்து பணிகள் தொடங்கியதும்தான் எப்போது முடிக்கப்படும் என்று கூறமுடியும்.

இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை. எங்களுக்கு என்ன சரி என்று படுகிறதோ அதை செய்வோம். கட்சியின் கட்டமைப்பு பற்றி நாங்கள் சொல்லவில்லை. ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக கூறுவது உங்களுடைய யூகம். கட்சியில் நிர்வாகிகள் தேர்தல் நடத்த தற்போது வாய்ப்பு இல்லை. நிர்வாகிகள் நேர்காணல் நடத்தப்பட்டு அறிவிக்கப்படுவார்கள்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் புகழஞ்சலி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு வந்தது. ஆனால் நான் வேறு நிகழ்வுகள் இருப்பதால் அதில் பங்கேற்கவில்லை.

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் தனிப்பாதை அமைப்பது பற்றி சட்டவல்லுனர்களுடன் கேட்டுதான் கருத்து சொல்ல முடியும்.

இந்தியா முழுவதும் காவிமயம் ஆக்க முயற்சிக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு பாடம் புகுட்டுவோம் என்று கூறுவது மு.க.ஸ்டாலினின் கருத்தாகும். எங்களுடைய கருத்தை நேரம் வரும்போது தெரிவிப்போம். மத்திய அரசு காவி மயத்தை பரப்புகிறதா? என்பதைப்பற்றி நான் பலமுறை பேசியிருக்கிறேன். அதுபற்றி திரும்ப திரும்ப பேசுவது சரியாக இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
Tags:    

Similar News