செய்திகள்

ஜேடர்பாளையத்தில் கடத்தப்பட்ட பிளஸ்-1 மாணவி மீட்பு

Published On 2018-08-30 13:01 GMT   |   Update On 2018-08-30 13:01 GMT
ஜேடர்பாளையத்தில் கடத்தப்பட்ட பிளஸ்-1 மாணவியை போலீசார் மீட்டனர். தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

கடந்த 24-ந்தேதி அன்று பள்ளிக்கு சென்ற இம்மாணவி இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பெற்றோர், மகளை பள்ளி, உறவினர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், மகளை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது தான் மகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தார்.

இந்த நிலையில் மாணவி வைத்துள்ள செல்போனை சைபர் கிரைம் போலீசார் கணினி மூலம் ஆய்வு செய்த போது, ஏற்காட்டில் இருப்பதாக சிக்னல் காட்டியது. இதையடுத்து போலீசார் ஏற்காட்டிற்கு சென்று மாணவியை பத்திரமாக மீட்டனர். அவரை ஏற்காடு, கொலக்கூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜயகுமார் (21) என்பவர் கடத்திச் சென்றது தெரியவந்தது.

போலீசார் விசாரிக்கையில், மாணவி வைத்துள்ள செல்போனில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவறுதலாக விஜயகுமாரின் செல்போனுக்கு அழைப்பு போய் உள்ளது. தவறுதலாக அழைப்பு வந்து விட்டது என்று கூறிய பிறகும், விஜயகுமார் கேட்காமல் தொடர்ந்து செல்போனில் கால் செய்து பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

பின்னர், ஆசை வார்த்தை காட்டி ஜேடர் பாளையத்துக்கு சென்று மாணவியை விஜயகுமார் கடத்திச் சென்றது தெரியவந்தது. விஜயகுமார் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News