செய்திகள்

நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலை உருவாக்கப்பட்டுள்ளது- நாராயணசாமி பேட்டி

Published On 2018-08-30 10:01 GMT   |   Update On 2018-08-30 10:01 GMT
மத்திய பா.ஜனதா ஆட்சியில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலை நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்று நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். #narayanasamy #centralgovernment

புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையை கலக்காமல் தன்னிச்சையாக பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்தார். இதன்மூலம் பதுக்கி வைத்துள்ள கள்ளப்பணம் வெளியில் வரும், தீவிரவாதிகள் கையில் சிக்கியுள்ள பணம் வெளியில் வரும் என கூறினார். ஆனால் இன்றைய தினம் ரிசர்வ் வங்கி பண மதிப்பிழப்பு தொடர்பான அறிக்கையை 2 ஆண்டுக்கு பின் வெளியிட்டுள்ளது.

இதில் 93.3 சதவீத பணம் திரும்பியதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் பண மதிப்பிழப்பு திட்டம் முழுமையாக தோல்வியடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் வங்கிகளில் பணம் மாற்ற நின்ற 160 பேர் இறந்தனர். சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டது. வேலை இழப்பு ஏற்பட்டது. இவை அனைத்திற்கும் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும். நாட்டில் வரலாறு காணாத அளவு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விலைவாசி உயர்ந்துள்ளது.


ஒட்டுமொத்தமாக நடுத்தர, ஏழை மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பெட்ரோல் ரூ.60க்கு விற்றது. அப்போது பல போராட்டங்களை பா.ஜனதா நடத்தியது. தற்போது பெட்ரோல் விலை ரூ.70க்கு மேல் விற்கப்படுகிறது. முற்போக்கு எழுத்தாளர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கருதி மகாராஷ்டிரா மாநிலத்தில் வீட்டு காவலில் வைத்துள்ளனர்.

இது முற்போக்கு எழுத்தாளர்களை கொச்சைப்படுத்தும் செயல். மத்திய பா.ஜனதா ஆட்சியில் எழுத்து, கருத்து சுதந்திரம், தனி நபர் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலை உருவாக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு புதுவை சார்பில் பல உதவிகளை திரட்டி வருகிறோம். பொதுமக்கள், அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் அளித்த உதவிகளை இன்று கேரளாவுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதுவரை ரூ.10 கோடிக்கு நிவாரணம் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.

புதுவையில் 95 சதவீத அரசு ஊழியர்கள் மழை நிவாரணத்திற்காக ஒரு நாள் சம்பளத்தை வழங்கியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.  #narayanasamy #centralgovernment

Tags:    

Similar News