செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் மீண்டும் மக்கள் புரட்சி வெடிக்கும்- திருமாவளவன்

Published On 2018-08-24 04:20 GMT   |   Update On 2018-08-24 04:20 GMT
ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமேயானால் மீண்டும் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று திருமாவளவன் எச்சரித்துள்ளார். #Sterlite #Thirumavalavan
தூத்துக்குடி:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு ஏதுவான ஒரு சூழலை தமிழக அரசு ஏற்படுத்தி இருக்கிறது என்பது வேதனைக்கு உரியது. அரசு இந்த ஆலையை மூடுவதற்காக வெளியிட்ட அரசாணை, ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு வலிமை பெற்றதாக இல்லை. அதனை பயன்படுத்தி மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பு இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிக்கை வெளியிட்டோம். இன்று அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது.


ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பலர் உயிர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் பசுமை தீர்ப்பாயம் ஒரு ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் குழு அமைத்து உள்ளது. அதற்கு ஸ்டெர்லைட் நிர்வாகம், தமிழக நீதிபதி அதில் இடம் பெறக்கூடாது என்ற எதிர்ப்பையும் தெரிவித்து இருக்கிறது.

இந்த சூழலில், மத்திய, மாநில அரசுகள் விழிப்பாக இருக்க வேண்டும். மறுபடியும் ஆலையை திறக்க இடம் தரக்கூடாது. ஆலை திறக்கப்படுமேயானால் மீண்டும் வெகுமக்கள் புரட்சி வெடிக்கும். மக்களை சிதறடித்து விட்டோம். அச்சுறுத்தி கலைய வைத்து விட்டோம் என்று கருதாமல், நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

ஒருநபர் விசாரணை ஆணையம் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறது என்பதை இறந்தவருக்கு சம்மன் அனுப்பியதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு கண்துடைப்புக்காக அமைத்து இருக்கிறது. ஆகவே சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும். அதில் பணியில் இருக்கும் ஒரு ஐகோர்ட்டு நீதிபதி மற்றும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் இடம்பெற வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுத்தோம்.

எனவே ஒருநபர் விசாரணை ஆணைய நடவடிக்கையை அரசு நிறுத்தி வைக்க வேண்டும். புதிதாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும். அல்லது ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணைக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அந்த விசாரணைக்கு அரசு ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார். #Sterlite #Thirumavalavan
Tags:    

Similar News