செய்திகள்

உரம் இருப்பு-விலை பட்டியலை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்- கலெக்டர் உத்தரவு

Published On 2018-08-23 17:07 GMT   |   Update On 2018-08-23 17:07 GMT
உரம் இருப்பு, விலைப் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று வியாபாரிகளுக்கு கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண் சாகுபடி பணிகள் முழுவதுமாக வடகிழக்கு பருவ மழையை நம்பியே நடைபெறுகிறது. நடப்பு ஆண்டில் 1,25,000 ஹெக்டர் நெல், 7,400 ஹெக்டர் சிறுதானியங்கள், 3,800 ஹெக்டர் பயறு வகைகள் மற்றும் 6540 ஹெக்டர் எண்ணெய் வித்துகள் சாகுபடி செய்ய இலக்கு பெறப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கு ராபி பருவத்திற்கு தேவையான ரசாயன உரம் 40,440 மெட்ரிக் டன் என கணக்கிடப்பட்டுள்ளது. அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிறுவனங்களிலும் தேவை யான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.

இவற்றில் யூரியா 1945 மெ.டன், டி.ஏ.பி 688 மெ.டன், பொட்டாஷ் 140 மெ.டன், கலப்பு உரங்கள் 947 மெ.டன் ஆக மொத்தம் 3720 மெ.டன் என உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2018 மாதத்திற்கு தேவையான உர விநியோக திட்டத்தின்படி சம்பந்தப்பட்ட உர உற்பத்தி நிறுவனங்களான இப்கோ கூட்டுறவு நிறுவனம்,, ஸ்பிக் நிறுவனம், மதராஸ் உர நிறுவனம், பாக்ட் நிறுவனம், இந்தியன் பொட்டாஷ் ஆகிய நிறுவனங்கள் மூலமாக தனியார் மற்றம் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் தேவைக்கு ஏற்ப உரங்களை இருப்பு வைத்து விற்பனை செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

உர விற்பனையாளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட விற்பனை முனைப்பு எந்திரம் மூலமாக மட் டுமே உரங்கள் விற்பனை செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. யூரியா தவிர பொட்டாஷ், பாஸ்பேட் மற்றும் கலப்பு உரங்கள் அந்தந்த உர உற்பத்தி நிறுவனங்களினால் உர மூடைகளில் அச்சடிக்கப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும்.

வேப்பம்புண்ணாக்கு கலந்த யூரியா தற்போது 45 கிலோ மூடைகளில் கிடைக்கிறது. ஒரு மூடையின் அதிக பட்ச விற்பனை விலை ரூ.266.50 ஆகும்.

உரம் இருப்பு மற்றும் விலைப்பட்டியியல் விபரத்தினை பொதுமக்கள் பார்வைக்கு ஏற்ப வைக்க வேண்டும். கூடுதல் விலைக்கு உரங்களை விற்றாலோ அல்லது தரமற்ற உரங்களை விற்றாலோ விற்பனையாளர்கள் மீது உரக்கட்டுபாடு சட்டம் 1985ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News