செய்திகள்

வாலாஜாவில் பள்ளி துணை முதல்வர் மீது புகார் அளித்த மனைவி தற்கொலை

Published On 2018-08-17 15:40 IST   |   Update On 2018-08-17 15:40:00 IST
வாலாஜாவில் பள்ளி துணை முதல்வர் மீது போலீசில் புகார் அளித்த மனைவி திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாலாஜா:

வேலூர் மாவட்டம் வாலாஜா பெல்லியப்பா நகர் வள்ளலார் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சரவணன். செய்யாறில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் துணை முதல்வராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அருணாதேவி (வயது 33).

இவர்களுக்கு லோகேஷ் மற்றும் யோகேஷ் என 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் லோகேஷ் 9-ம் வகுப்பும் மற்றும் யோகேஷ் 7-ம் வகுப்பும் படிக்கின்றனர். சரவணனுக்கும், அவரது மனைவி அருணாதேவிக்கும் கருத்து-வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கணவர் மீது அருணாதேவி புகார் அளித்தார். போலீசார், வீட்டு மேல் தளத்தில் சரவணனையும், கீழ் தளத்தில் குழந்தைகளுடன் அருணாதேவியையும் தங்கி வசிக்குமாறு சமசரப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, பள்ளி துணை முதல்வராக பணிபுரிந்து வந்த சரவணனை, பள்ளி நிர்வாகம் திடீரென அப்பொறுப்பில் இருந்து நீக்கி வெளியேற்றியது. சரவணன் வீட்டிலேயே இருந்ததால் மனைவியுடனான தகராறு நீடித்தது.

நேற்று காலை மகன்களை வழக்கம் போல் அருணா தேவி பள்ளிக்கு அனுப்பி வைத்தார். மாலையில் குழந்தைகள் வீடு திரும்பிய போது, கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, தாய் அருணா தேவி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து குழந்தைகள் 2 பேரும் கதறி அழுதனர்.

தகவலறிந்ததும் வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து சரவணனை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவருடன் ஏற்பட்ட தகராறில் அருணாதேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News