செய்திகள்

பண்ருட்டி அருகே தி.மு.க.வினர் மோதல் - 20 பேர் கைது

Published On 2018-08-13 09:58 GMT   |   Update On 2018-08-13 09:58 GMT
பண்ருட்டி அருகே தி.மு.க.வை சேர்ந்த இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டையை சேர்ந்தவர் சுந்தர வடிவேல். இவர் நகர தி.மு.க. செயலாளராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவர் தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளராக உள்ளார்.

சுந்தர வடிவேலும், சதாசிவமும் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக அவர்களிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு புதுப்பேட்டை அருகே உள்ள தொரப்பாடி மாரியம்மன்கோவில் திருவிழா நடைபெற்றது.

திருவிழாவின்போது சுந்தர வடிவேலுக்கும், சதாசிவத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது புதுப்பேட்டை போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலையில் சுந்தர வடிவேலுக்கும், சதாசிவத்துக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்பு 2 பிரிவினரும் கோஷ்டியாக மோதிக்கொண்டனர். இந்த மோதலில் சுந்தர வடிவேலின் அண்ணன் ராஜாராமின் வீடு சூறையாடப்பட்டது.

அதுபோல சுந்தர வடிவேலின் தம்பி வெங்கடேசன் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரும் அடித்து நொறுக்கப்பட்டது. சுந்தர வடிவேலுவின் ஆதரவாளர்கள் சதாசிவத்தின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். இந்த மோதலில் சுந்தர வடிவேலின் மகன் ராஜ்குமார் தாக்கப்பட்டார்.

படுகாயம் அடைந்த ராஜ்குமார் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் விலக்கி விட்டனர்.

இந்த மோதல் தொடர்பாக புதுப்பேட்டை போலீசில் இரு தரப்பினரும் புகார் செய்தனர். அதன்பேரில் 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தி.மு.க. நகர செயலாளர் சுந்தர வடிவேல், தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சதாசிவம் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடிவருகின்றனர்.

தி.மு.க.வினரிடையே திடீரென்று மோதல் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News