செய்திகள்

நாகையில் 2 இடங்களில் புதுப்பிக்கப்பட்ட புறக்காவல் நிலையங்கள் - போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்

Published On 2018-08-11 16:39 GMT   |   Update On 2018-08-11 16:39 GMT
நாகையில் 2 இடங்களில் புதுப்பிக்கப்பட்ட புறக்காவல் நிலையங்களை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் திறந்து வைத்தார்.
நாகப்பட்டினம்:

நாகையில் புதிய கடற்கரையில் பல்வேறு பொழுதுபோக்கு சிறப்பு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பூங்கா உள்ளது. நாகையில் உள்ள ஒரே பொழுதுபோக்கு இடமாக நாகை புதிய கடற்கரை உள்ளது. இதில் நடைப்பயிற்சி மற்றும் ஓய்வெடுப்பதற்காக நாள்தோறும் பொதுமக்கள் அதிக அளவு கூடும் இடமாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி புதிய கடற்கரை பொலிவிழந்து காணப்பட்டன. மேலும் அங்கு பொதுமக்கள் அமருவதற்காக வைக்கப்பட்டிருந்த இருக்கைகளும் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு மது அருந்துவதற்கும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இருந்து வந்தது. இதுகுறித்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் உடனடியாக அங்கு இருந்த புறக்காவல் நிலையம் புதுப்பிக்கப்பட்டது. இதேபோல நாகை புதிய பஸ்நிலையத்திலும் இருந்த புறக்காவல் நிலையமும் புதுப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் புதுப்பிக்கப்பட்ட 2 புறக்காவல் நிலையங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கலந்துகொண்டு புறக்காவல் நிலையங்களை திறந்து வைத்தார். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த வாக்கி டாக்கிகள் சரியாக இயங்குகிறதா? என்று ஆய்வு செய்தார். விழாவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் இனியவன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News