செய்திகள்

கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு- தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வந்தார்

Published On 2018-08-06 08:35 GMT   |   Update On 2018-08-06 11:10 GMT
தி.முக. தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் அவரைக் காண காவேரி மருத்துவமனைக்கு முதல்முறையாக தயாளு அம்மாள் இன்று வந்தார். #DMKLeader #Karunanidhi #KauveryHospital
சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த மாதம் இறுதியில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

கழுத்தில் பொருத்தப்பட்டு இருந்த செயற்கை சுவாச கருவியை மாற்றிய பிறகு அவருக்கு காய்ச்சல் அடித் தது. அதன் பிறகு கடந்த மாதம் 28-ந்தேதி மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து கருணாநிதி சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மூச்சு திணறல் உடனடியாக சரியான நிலையில் மறுநாள் அவருக்கு ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டது.

இதன் காரணமாக கருணாநிதியின் உடல்நலத்தில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் காவேரி ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

3 நாட்களுக்கு தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு திரண்டு நின்று, எழுந்துவா தலைவா எழுந்துவா” என்று கண்ணீர் மல்க கோ‌ஷமிட்டனர். நிறைய தொண்டர்கள் இரவு-பகல் பாராது ஆஸ்பத்திரி முன்பே தூங்கி எழுந்தனர்.

அடுத்த 2 நாட்களில் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் கருணாநிதி உடல்நிலை சீராகி விட்டதாக தெரிவித்தனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கருணாநிதியை நேரில் பார்த்து நலம் விசாரிக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.

இதன் காரணமாக தி.மு.க.வினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். காவேரி ஆஸ்பத்திரி முன்பிருந்து கிளம்பி சென்றனர். இதைத் தொடர்ந்து கருணாநிதியை 24 மணி நேரமும் டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். இன்று 10-வது நாளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கருணாநிதி கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள டிரக் கியாஸ்டமி எனும் செயற்கை சுவாச கருவி வழியாக அவர் சுவாசித்து வருகிறார். சில சமயம் தானாகவே சுவாசித்து வருகிறார்.

இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக கருணாநிதி உடல்நிலையில் ஏற்றமும்-இறக்கமுமாக காணப்படுவதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். கடந்த வாரம் கருணாநிதிக்கு கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டது.

2 தினங்களுக்கு முன்பு கருணாநிதியின் கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை அதிகரித்தது. லண்டனைச் சேர்ந்த டாக்டர் முகமதுரேலா வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆலோசனைப்படி டாக்டர்கள் குழு தற்போது கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கிறது.

ஆனால் கருணாநிதி உடலில் உள்ள இதர உறுப்புகளிலும் பிரச்சனைகள் எழுந்துள்ளதால் கல்லீரலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு தாமதமாக பலன் கிடைப்பதாக கூறப்படுகிறது.

கல்லீரல் செயல்பாட்டில் திருப்தி இல்லாததால் கருணாநிதிக்கு நேற்று முதல் மஞ்சள் காமாலை ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களிலும் (ப்ளெட்லெட்ஸ்) குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளை தீர்க்க டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சைகளை அளித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை அவரது நாடி துடிப்பிலும் சற்று தொய்வு ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை உறுதி செய்ய இயலவில்லை.

நோய் எதிர்ப்பு சக்தியை தரும் தட்டணுக்கள் குறைந்து வருவதால் கருணாநிதி உடலில் செலுத்தப்படும் மருந்துகள் மிக மெதுவாகவே வேலை செய்கின்றன. இதனால் அவர் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக இன்று மதியம் தகவல்கள் வெளியானது. இது தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதையடுத்து கருணாநிதியின் உடல்நிலையை அறிந்து கொள்ள அனைத்து தரப்பினரிடமும் ஆர்வம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் காவேரி மருத்துவமனையை தொடர்பு கொண்டு போனில் கேட்டனர்.

கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பது தி.மு.க. தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் இன்று மருத்துவமனைக்கு விரைந்தனர். அவரது மனைவி தயாளு அம்மாள் முதன் முதறையாக கருணாநிதியைக் காண இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.

ராஜாத்தி அம்மாள், மு.க.ஸ்டாலின், கனிமொழி, செல்வி ஆகியோர் மருத்துவமனையில் உள்ளனர். துரை முருகன் உள்ளிட்ட தி.மு.க. மூத்த தலைவர்களும் இன்று மதியம் மருத்துவமனைக்கு வந்தனர்.

தி.மு.க. மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து ஆஸ்பத்திரிக்கு சென்றதால் தி.மு.க. நிர்வாகிகளும் காவேரி ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். இதனால் காவேரி மருத்துவமனை முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி உடல்நிலை பற்றி விசாரிக்க மத்திய மந்திரி நிதின்கட்காரி இன்று இரவு சென்னை வருகிறார். #DMKLeader #Karunanidhi #KauveryHospital
Tags:    

Similar News