செய்திகள்

தலைவாசல் அருகே நாய்கள் கடித்ததில் 13 ஆடுகள் பலி

Published On 2018-07-31 18:03 GMT   |   Update On 2018-07-31 18:03 GMT
தலைவாசல் அருகே நாய்கள் கடித்ததில் 13 ஆடுகள் பலியான சம்பவத்தால் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சமடைந்து உள்ளனர்.
தலைவாசல்:

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை புதூரைச் சேர்ந்தவர் முகமது சுல்தான். விவசாயி. இவர் தனது விவசாய தோட்டத்தில் கொட்டகை போட்டு அதில் 30 ஆடுகளை வளர்த்து வந்தார்.

நேற்று அதிகாலை முகமது சுல்தானின் மனைவி நூர்ஜகான் ஆட்டு கொட்டகைக்கு சென்றார். அப்போது அங்கு ஆடுகள் செத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி கணவருக்கு தகவல் கொடுத்தார். முகமது சுல்தான் வந்து பார்த்தபோது 13 ஆடுகள் செத்து கிடந்தன.

இதுகுறித்து முகமது சுல்தான் கிராம நிர்வாக அலுவலர் ரகுபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து காட்டுக்கோட்டை கால்நடை உதவி மருத்துவர் மணிவேல் அங்கு வந்து பரிசோதனை செய்தார். பின்னர் ஆட்டின் உடல்கள் புதைக்கப்பட்டன. நாய்கள் கடித்ததில் ஆடுகள் செத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுபற்றி அந்த கிராம மக்கள் கூறும்போது, காட்டுக்கோட்டை சுடுகாட்டில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதேபோல் கறிக்கடை பகுதிகளிலும் நாய்கள் சுற்றுகின்றன. இவற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சில நாட்களில் இதே ஊரைச் சேர்ந்த சிலருடைய 100 கோழிகள், 30 ஆடுகள், ஒரு கன்றுகுட்டி ஆகியவற்றை நாய்கள் கடித்துக் கொன்றன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சமடைந்து உள்ளனர். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும், என்றனர். 
Tags:    

Similar News