செய்திகள்

காவேரி ஆஸ்பத்திரி முன்பு வெள்ளம் போல திரண்ட தி.மு.க. தொண்டர்கள்- பெண்கள்

Published On 2018-07-28 05:57 GMT   |   Update On 2018-07-28 05:57 GMT
தி.மு.க. தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை முன்பு தொண்டர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் மனித தலைகளாக, மக்கள் கடலாக மாறியுள்ளது. #Karunanidhi #KaveryHospital
சென்னை:

அன்பு உடன் பிறப்பே.... என்ற காந்த குரல் மூலம் லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்களை சுண்டி இழுத்தவர் கருணாநிதி. கடந்த 2 ஆண்டுகளாக அந்த காந்த குரல் ஓசையை கேட்க முடியவில்லையே என்ற ஏக்கம் ஒவ்வொரு தி.மு.க. தொண்டனின் மனதிலும் இருந்தது.

வயது முதிர்வு காரணமாக முன்பு போல அவரால் பேச இயலாது என்பதை உணர்ந்த தி.மு.க. தொண்டர்கள் அவரை பார்க்க முடியாமல் தவித்தப்படி இருந்தனர். இந்த நிலையில் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்ட தகவல் அவர்களிடம் வேதனையை ஏற்படுத்தியது.

கருணாநிதி விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் கோபாலபுரம் 4-வது தெருவில் உள்ள அவர் வீட்டுக்கு படையெடுத்தனர். நேற்று முன்தினம் இரவு ஓ.பன்னீர் செல்வம் கோபாலபுரம் சென்று கருணாநிதி உடல் நலம் பற்றி விசாரித்த தகவல் பரவிய பிறகு தொண்டர்கள் மத்தியில் ஒருவித பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தி.மு.க. தொண்டர்கள் கோபாலபுரத்துக்கு படையெடுத்தனர். அவர்களை கலைந்து செல்லும்படி மு.க.ஸ்டாலின் பல தடவை கேட்டுக்கொண்டார். ஆனால் தி.மு.க.வினர் கலைந்து செல்ல மறுத்தனர்.

நேரம் செல்ல, செல்ல பல்வேறு கட்சித் தலைவர்கள் கோபாலபுரத்துக்கு வந்ததால் தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு அதிகரித்தது. சென்னை புறநகர் பகுதியில் இருந்தும் தி.மு.க. தொண்டர்கள் புறப்பட்டு வந்தனர்.

தொண்டர்களைக் கட்டுப்படுத்த கோபாலபுரத்தில் கருணாநிதி வீட்டை சுற்றி 6 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்தனர். என்றாலும் போலீஸ் தடையை மீறி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கோபாலபுரத்தில் குவிந்தபடி இருந்தனர்.

இதைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘‘சிலர் திட்டமிட்டு வதந்திகளை பரப்புகிறார்கள். அந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

தலைவர் கலைஞரை சந்திக்க வருவதை தவிர்க்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். என்றாலும் தி.மு.க.வினர் கலைந்து செல்லவில்லை.

மாலையில் தொண்டர்கள் வருகை மேலும் அதிகரித்தது. வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து குவிந்து விட்டனர். இதனால் நேற்று மாலை கோபாலபுரம் பகுதி தொண்டர்கள் வெள்ளமாக காணப்பட்டது.


நேற்று இரவு தொண்டர்கள் கலையவில்லை. இரவு 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் புறப்பட்டு சென்ற பிறகும் கூட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கருணாநிதியின் கோபாலபுரம் வீடு முன்பு நின்று கொண்டே இருந்தனர்.

நள்ளிரவு 12.30 மணிக்கு கருணாநிதிக்கு ரத்த அழுத்த குறைவு ஏற்பட்ட தகவல் பரவியதும் மீண்டும் தி.மு.க. தொண்டர்கள் கோபாலபுரத்துக்கு படையெடுத்தனர். கருணாநிதி ஸ்டெச்சரில் படுக்க வைத்து ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட போது ‘‘டாக்டர் கலைஞர் வாழ்க’’ என்று விண் அதிர கோ‌ஷம் எழுப்பினார்கள்.

ஆம்புலன்ஸ் ஆழ்வார்பேட்டைக்கு புறப்பட்டு சென்றதும் கோபாலபுரத்தில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களும் காவேரி ஆஸ்பத்திரி பகுதிக்கு இடம் பெயர்ந்தனர். அங்கும் அவர்கள் ‘‘டாக்டர் கலைஞர் வாழ்க’’ என்று கோ‌ஷமிட்டபடி இருந்தனர்.

கருணாநிதி உடல்நிலை பற்றி வதந்தி பரவிய காரணத்தால் பொது மக்களும் நள்ளிரவில் ஆழ்வார்பேட்டை காவேரி ஆஸ்பத்திரி நோக்கி புறப்பட்டு வந்தனர். ஏராளமான பெண்களும் ஆழ்வார்பேட்டையில் குவிந்தனர்.


தலைவா.... தலைவா என்று அந்த பெண்கள் கண்ணீர் விட்டு கதறினார்கள். அவர்களை அமைதிப்படுத்துவதற்கு தி.மு.க. மூத்த தலைவர்கள் படாத பாடுபட்டனர்.

அதிகாலையில் ஆஸ்பத்திரியில் இருந்து ஆ.ராசா வெளியில் வந்து பேசிய பிறகே தொண்டர்கள் மத்தியில் அமைதி ஏற்பட்டது.

இன்று காலை ஆழ்வார்பேட்டைக்கு தொண்டர்கள் வருகை மேலும் அதிகரித்தது. இதனால் காவேரி ஆஸ்பத்திரி சுற்றுப் பகுதிகள் மனித தலைகளாக, மக்கள் கடலாக மாறியுள்ளது. #DMK #Karunanidhi #KaveryHospital
Tags:    

Similar News