செய்திகள்

டாக்டர்கள் தீவிர சிகிச்சை- கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு

Published On 2018-07-27 06:44 GMT   |   Update On 2018-07-27 06:44 GMT
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனையின் 4 பேர் கொண்ட கூடுதல் மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். #DMK #Karunanidhi #KauveryHospital
சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டபோது, 6-வது முறையாக முதல்- அமைச்சராகி புதிய சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற சிறப்பை அந்த தேர்தலில் பெற்ற கருணாநிதிக்கு அதன் பிறகு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி எளிதாக மூச்சு விட சிரமப்பட்டார். இதையடுத்து அவருக்கு தொண்டையில் “டிரக்கியாஸ்டமி” எனும் செயற்கை சுவாசக் குழாய் பொருத்தப்பட்டது. அவர் சுவாசம் விடுவதில் வழக்கமான நிலை வந்ததும் அந்த டிரக்கியாஸ்டமி குழாய் அகற்றப்படும் என்று டாக்டர்கள் அறிவித்து இருந்தனர்.

கடந்த 20 மாதங்களாக அவர் செயற்கை குழாய் மூலமாகவே சுவாசித்து வருகிறார். இதனால் அவர் கட்சிப் பணிகள் உள்பட எந்த பணிகளிலும் ஈடுபடாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் நல்ல உடல் நிலைக்கு மாறியதால் அறிவாலயம் மற்றும் கனிமொழி வீட்டுக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் அவரது தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாச குழாயை மாற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக கருணாநிதி கடந்த 18-ந்தேதி காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு புதிய குழாய் பொருத்திக் கொண்டார். அன்றே வீடு திரும்பிய அவருக்கு சளி தொல்லை அதிகரித்தது.

இதற்கிடையே சளி தொல்லை காரணமாக கருணாநிதிக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் காவிரி ஆஸ்பத்திரியில் இருந்து சிறப்பு டாக்டர்கள் வந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆஸ்பத்திரியில் இருந்து கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டில் மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

இதன் காரணமாக கருணாநிதி உடல்நிலை குறித்து வதந்தி பரவியது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அந்த வதந்திகளை நம்ப வேண்டாம் கருணாநிதி நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக அறிவித்தார். என்றாலும் கருணாநிதி உடல்நலம் குறித்து கடந்த 2 தினங்களாக அதிகளவில் வதந்தி பரவியது.

நேற்று மதியம் கருணாநிதி உடல்நிலையில் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் குழு அவருக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர். அவரது கை நரம்பு வழியாக மருந்துகள் செலுத்தப்பட்டன.

கருணாநிதியின் உடல்நிலை பற்றி டாக்டர்கள் குழுவினர் நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், “கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாகவே காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. டாக்டர்கள் குழு அவரை 24 மணி நேரமும் கவனித்துக் கொள்கிறது. வீட்டிலேயே அனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன” என்று கூறப்பட்டு இருந்தது.


இந்த நிலையில் நேற்று இரவு 9.45 மணிக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி மற்றும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் அடுத்தடுத்து கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து கருணாநிதி உடல்நலம் பற்றி விசாரித்தனர். இதனால் பரபரப்பு அதிகரித்தது.

இந்த நிலையில் நேற்று இரவு கருணாநிதி உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. அவரை கவனித்து வரும் டாக்டர்கள், நர்சுகள் அவரது உடல்நலம் பற்றி திருப்தி தெரிவித்தனர். என்றாலும் டாக்டர்கள் குழு 24 மணி நேரமும் சிறப்பு ஏற்பாடுகள் மூலம் கருணாநிதி உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள்.

2 நாட்களுக்கு முன்புவரை கருணாநிதி அடிக்கடி நாற்காலியில் அமர்ந்தபடி இருப்பார். மாலையில் நீண்டநேரம் நாற்காலியில் அமர்ந்தபடி அவர் டி.வி. பார்ப்பது உண்டு. ஆனால் கடந்த 2 தினங்களாக சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்று மற்றும் சளி தொல்லை காரணமாக அவர் படுத்தப்படியே இருக்கிறார்.

இன்று காலை கருணாநிதி உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு அனைத்து வித பரிசோதனைகளையும் செய்தனர். பிறகு அவரது இதயம் நன்கு செயல்படுவதாக தெரிவித்தனர். நாடி துடிப்பு நன்றாக இருப்பதாக சோதனையில் தெரிய வந்தது.

மேலும் கருணாநிதிக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட வேறு பிரச்சனைகள் எதுவும் இல்லை என்பதால் சிகிச்சையை சுமூகமாக நடத்துவதாக கூறப்படுகிறது.

தற்போது கருணாநிதிக்கு சளி தொல்லை மட்டுமே அதிகமாக உள்ளது. அதை உரிய மருந்துகள் மூலம் ஓரிரு நாட்களில் சரி செய்து விடுவார்கள் என்று தெரிகிறது. அதன் பிறகு கருணாநிதி உடல்நிலையில் முழுமையான முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இன்று காலை 9 மணி அளவில் காவேரி மருத்துவமனையில் இருந்து 4 பேர் கொண்ட கூடுதல் மருத்துவ குழு கருணாநிதி வீட்டுக்கு வந்தது. அந்த குழுவில் இருந்த டாக்டர்கள் கருணாநிதிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை ஆய்வு செய்தனர்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காலை 9.30 மணிக்கு கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தார். அவருடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோரும் வந்தனர்.

கருணாநிதியை பார்ப்பதற்காக மு.க.அழகிரி இன்று காலை மதுரையில் இருந்து கார் மூலம் சென்னை வருகிறார். அவர் நேராக கோபாலபுரம் சென்று கருணாநிதியை பார்க்கிறார். அவரது உடல் நிலைபற்றி டாக்டர்களிடம் கேட்டு அறிகிறார்.

கருணாநிதியை நேரில் சந்திப்பதை தவிர்க்குமாறு காவேரி மருத்துவமனை டாக்டர்கள் இன்றும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டனர். இதையடுத்து பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை, “கருணாநிதி விரைவில் குணம் அடைய பிரார்த்திப்பதாக” அறிக்கை வெளியிட்டுள்ளார்.



தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் சங்க தலைவர் வெள்ளையன் இன்று காலை கோபாலபுரத்துக்கு வந்து கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தார். கருணாநிதியை சந்திக்க தலைவர்கள் வந்த வண்ணம் இருப்பதால் அவரது வீட்டின் முன்பும், வீட்டைச் சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். #DMK #Karunanidhi  #KauveryHospital
Tags:    

Similar News