செய்திகள்

உள்கட்சி விவகாரத்தில் கவர்னரிடம் புகார் கொடுப்பதா? சபாநாயகர் தரப்பு ஐகோர்ட்டில் வாதம்

Published On 2018-07-25 10:52 GMT   |   Update On 2018-07-25 10:52 GMT
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் சபாநாயகர் தனபால் தரப்பில் இன்று வாதங்கள் முன்வைக்கப்பட்டது. #MLAsDisqualificationCase #TNAssemblySpeaker #MadrasHC
சென்னை:

தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள்.

இதையடுத்து 3வது நீதிபதியின் விசாரணைக்கு இந்த வழக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த வழக்கை 3வது நீதிபதியாக, சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி எம்.சத்திய நாராயணன் விசாரித்து வருகிறார்.



3வது நாளாக இன்று இந்த வழக்கு அவர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சபாநாயகர் தனபால் சார்பில் டெல்லி மூத்த வக்கீல் ஆரிமா சுந்தரம் ஆஜராகி வாதிட்டார். அவர் தன் வாதத்தில் கூறியதாவது:-

பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களால் முதல்-அமைச்சர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாறு பெரும்பான்மையானவர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட முதல்-அமைச்சருக்கு எதிராக, கவர்னரிடம் மனுதாரர்கள் 18 பேரும் மனு கொடுத்துள்ளனர்.

கட்சிக்குள் உள்ள விவகாரத்தில், கட்சிக்குள் பேசி தீர்க்காமல், கவர்னரிடம் போய் புகார் செய்தால், அது சொந்த கட்சிக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலாகத்தான் கருதப்படும்.

இதை தனி நபருக்கு எதிரான தாக்குதலாக கருத முடியாது. மனுதாரர்கள், தாங்கள் அரசாங்கத்தை கலைக்க வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுக்கவில்லை என்றும் முதல்அமைச்சருக்கு எதிராக மட்டுமே புகார் மனு கொடுத்ததாகவும் கூறுவதை ஏற்க முடியாது. இது தனிநபருக்கு எதிரான புகார் இல்லை.

பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆளும் கட்சிக்கு எதிரான புகாராகும். மேலும், கவர்னரிடம் போய், இந்த 18 பேரும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி கடமையை ஆற்றுங்கள் என்று மனு கொடுத்துள்ளனர். கவர்னருக்கு என்ன அதிகாரம் உள்ளது? ஒரு மாநில அரசை கலைக்கும் அதிகாரம் தான் உள்ளது. அப்படிப்பட்டவரிடம் போய் கடமை ஆற்றுங்கள் என்று மனு கொடுத்தால், தமிழக அரசை கலைத்து விடுங்கள் என்று தானே அர்த்தம்.

அதனால், 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு சட்டப்படி பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பிறப்பித்ததில், சட்டவிதி மீறலோ, உள்நோக்கம் கொண்டதோ இல்லை. சபாநாயகர் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்துதான் இறுதி முடிவு எடுத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு அவர் வாதிட்டார். அவரது வாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று, 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தகக்து. 
Tags:    

Similar News