செய்திகள்

தமிழக கல்வி தரத்தை உயர்த்தவே நீட் தேர்வை ஆதரிக்கிறோம்- கிருஷ்ணசாமி

Published On 2018-07-24 07:06 GMT   |   Update On 2018-07-24 07:06 GMT
இந்திய அளவில் தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலேயே நீட் தேர்வை ஆதரிப்பதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். #NEET #Krishnasamy
நெல்லை:

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தேவேந்திரகுல வேளாளர் இனத்தை சேர்ந்த 6 பிரிவினரை பட்டியலினத்தில் இருந்து நீக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயரில் இதர பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இதை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பாக மாநாடுகள் நடத்தி வருகிறோம். வருகிற அக்டோபர் மாதத்திற்குள் இதை நிறைவேற்றாவிட்டால் பின்னர் போராட்டம் நடத்தப்படும்.

தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய பாட திட்டம் நன்றாக உள்ளது. முந்தைய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலேயே ‘நீட்’ தேர்வை ஆதரித்தோம். பல தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரம் குறைவாக உள்ளதால் ‘நீட்’ தேர்வை அமல்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.


புதிய தமிழகம் கட்சி யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம். தமிழகத்திற்கென தனி அடையாளம் உள்ளது. அதை அழிக்க பல சக்திகள் முயற்சிக்கின்றன. தமிழ்தேசியம் பேசுபவர்கள் தமிழை பயன்படுத்தி தமிழகத்தில் கபளீகரம் செய்ய முயல்கிறார்கள். யார் தமிழர் என்பதை தெளிவுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.

பல மதவாத சக்திகள் பெயரை மாற்றி அன்னிய நாட்டு நிதி உதவியை பெற்று தமிழகத்தில் புகுந்து தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இதை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த முன்வர வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள், துணை வேந்தர்கள் நியமிப்பதில் முறைகேடுகள் நடந்து வருகிறது. இதனால் உயர் கல்வியின் தரம் குறைந்து வருகிறது. இதை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #NEET #Krishnasamy
Tags:    

Similar News