செய்திகள்
சிதம்பரத்தில் சாமி ஊர்வலத்தில் வாலிபர் குத்திக்கொலை - ஒருவர் கைது
சாமி ஊர்வலத்தின் போது வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Murdercase
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் முத்துமாணிக்கம் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 26). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் தினகரன் (28). இவரும் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். வினோத் குமாருக்கும், தினகரனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தினகரன் குடிபோதையில் வினோத் குமாரை திட்டினார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. இதில் இருவரும் ஒரு வருக்கொருவர் தாக்கி கொண்டனர்.
அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இருப்பினும் தினகரனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. இது குறித்து அவர் தனது நண்பர்கள் கார்த்திக், சுரேஷ், மணிகண்டன் ஆகியோரிடம் கூறினார்.
நேற்று இரவு அங்குள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது தினகரன் தனது நண்பர்கள் 3 பேருடன் அங்கு நின்று கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் வினோத்குமாரும் அங்கு வந்தார். அப்போது அவரிடம், தினகரன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். பின்பு தினகரனும், அவரது நண்பர்களும் சேர்ந்து வினோத்குமாரை தாக்கினர். அப்போது தினகரன் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்குமாரின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த வினோத்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.
இதையறிந்ததும் தினகரன், கார்த்திக், சுரேஷ், மணிகண்டன் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த வினோத் குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இன்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் வினோத்குமார் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் தாலுகா போலீசில் வினோத் குமாரின் தம்பி விஜயகுமார் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தினகரனை கைது செய்தனர்.
தலைமறைவாகிவிட்ட கார்த்திக், சுரேஷ், மணிகண்டன் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.#Murdercase