கண்டக்டர் இல்லாத பஸ்களில் பயணிகளுக்கு அவசர உதவி - ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்
சென்னை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சமீபத்தில் கண்டக்டர் இல்லாமல் இயக்கப்படும் பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் புறப்பட்ட பிறகு நடுவில் வேறு எந்த இடத்திலும் நிற்காது.
பாயிண்ட் டூ பாயிண்ட்களாக இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளுக்கு டிரைவரே டிக்கெட்டுகளை வழங்குவார்.
இந்த நிலையில் கண்டக்டர் இல்லாமல் பஸ்கள் இயக்கப்படுவதால் டிரைவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் தனியார் அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
கண்டக்டர் இல்லாததால் பயணிகளின் பாதுகாப்பில் அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும் கூறி இருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது போக்குவரத்து கழக செயலாளர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
அதில், மாநிலத்தில் 8 போக்குவரத்து கழகங்களும், சென்னையில் மெட்ரோ பாலிட்டன் போக்குவரத்து கழகம் செயல்படுகின்றன. 21 ஆயிரத்து 555 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 1 கோடியே 75 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்.
தமிழ்நாடு மோட்டார் வாகன சட்ட பிரிவு 227-ன் படி கண்டக்டர் இல்லாத பஸ்கள் இடையில் எங்கும் பயணிகளை ஏற்றுவதில்லை. பிரிவு 38-ன்படி பயணிகளை ஏற்றுவது, இறங்குவதில் கண்டக்டர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் டிரைவருக்கும் அந்த பொறுப்பு உள்ளது.
பொதுமக்கள் மீதான அக்கறையை கவனத்தில் கொண்டே இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போதைய கால கட்டத்தில் பொது மக்கள் பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ்களை விரும்புகிறார்கள்.
இதனால் நேரம் மிச்சமாகும் என்பதால் பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ்களில் பயணம் செய்கிறார்கள். அதற்கு வரவேற்பு உள்ளதால் இது போன்ற நிறைய பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்போது 256 கண்டக்டர் இல்லாத பஸ்கள் ஓடுகின்றன.
பஸ்கள் புறப்படும்போது பயணிகளுக்கு டிக்கெட் வழங்கப்படுகிறது. இது மாதிரியான பஸ்கள் ஆந்திரா, கர்நாடக, மகாராஷ்டிரா மாநிலங்களில் இயக்கப்படுகின்றன. கண்டக்டர் இல்லாதால் டிரைவர்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படும் என்பதை ஏற்க முடியாது.
அவசர காலத்தில் பயணிகள் பஸ்சை நிறுத்த வேண்டும் என்றால் பஸ்சில் பெல் வைக்கப்பட்டு உள்ளது. அதை அழுத்தினால் உடனே பஸ்சை டிரைவர் நிறுத்தி விடுவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #BusConductor #TNTransport