அடடே முதலிடம் போச்சே... அதிவேக அரை சதம் மிஸ் ஆனது குறித்து பாண்ட்யா கலகல
- 16 பந்துகளில் ஹர்திக் பாண்ட்யா அரை சதம் அடித்தார்.
- உண்மையாகவே நான் அவுட்டாகி வெளியே வரும் வரை அது 2-வது அதிவேக அரைசதம் என்று எனக்குத் தெரியாது.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி ஹர்திக் பாண்ட்யா அதிரடியில் 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா 25 பந்துகளில் 63 ரன்கள் குவித்து ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் 16 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார்.
இந்நிலையில் டி20 போட்டியில் முதலிடத்தை மிஸ் பண்ணிட்டோமே என்று தோன்றியதாக ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உண்மையாகவே நான் அவுட்டாகி வெளியே வரும் வரை அது 2-வது அதிவேக அரைசதம் என்று எனக்குத் தெரியாது. சோஷியல் மீடியா டீம் சொன்னதும் 'அடடா முதலிடத்தை மிஸ் பண்ணிட்டோமே' என்று தோன்றியது. இருந்தாலும் யுவி பாஜி (யுவராஜ் சிங்) அந்த சாதனையை வைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி தான் என கூறினார்.