என் மலர்
நீங்கள் தேடியது "கண்டக்டர் இல்லாத புதிய அரசு பஸ்கள்"
சென்னை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சமீபத்தில் கண்டக்டர் இல்லாமல் இயக்கப்படும் பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் புறப்பட்ட பிறகு நடுவில் வேறு எந்த இடத்திலும் நிற்காது.
பாயிண்ட் டூ பாயிண்ட்களாக இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளுக்கு டிரைவரே டிக்கெட்டுகளை வழங்குவார்.
இந்த நிலையில் கண்டக்டர் இல்லாமல் பஸ்கள் இயக்கப்படுவதால் டிரைவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் தனியார் அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
கண்டக்டர் இல்லாததால் பயணிகளின் பாதுகாப்பில் அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும் கூறி இருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது போக்குவரத்து கழக செயலாளர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
அதில், மாநிலத்தில் 8 போக்குவரத்து கழகங்களும், சென்னையில் மெட்ரோ பாலிட்டன் போக்குவரத்து கழகம் செயல்படுகின்றன. 21 ஆயிரத்து 555 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 1 கோடியே 75 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்.
தமிழ்நாடு மோட்டார் வாகன சட்ட பிரிவு 227-ன் படி கண்டக்டர் இல்லாத பஸ்கள் இடையில் எங்கும் பயணிகளை ஏற்றுவதில்லை. பிரிவு 38-ன்படி பயணிகளை ஏற்றுவது, இறங்குவதில் கண்டக்டர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் டிரைவருக்கும் அந்த பொறுப்பு உள்ளது.
பொதுமக்கள் மீதான அக்கறையை கவனத்தில் கொண்டே இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போதைய கால கட்டத்தில் பொது மக்கள் பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ்களை விரும்புகிறார்கள்.
இதனால் நேரம் மிச்சமாகும் என்பதால் பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ்களில் பயணம் செய்கிறார்கள். அதற்கு வரவேற்பு உள்ளதால் இது போன்ற நிறைய பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்போது 256 கண்டக்டர் இல்லாத பஸ்கள் ஓடுகின்றன.
பஸ்கள் புறப்படும்போது பயணிகளுக்கு டிக்கெட் வழங்கப்படுகிறது. இது மாதிரியான பஸ்கள் ஆந்திரா, கர்நாடக, மகாராஷ்டிரா மாநிலங்களில் இயக்கப்படுகின்றன. கண்டக்டர் இல்லாதால் டிரைவர்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படும் என்பதை ஏற்க முடியாது.
அவசர காலத்தில் பயணிகள் பஸ்சை நிறுத்த வேண்டும் என்றால் பஸ்சில் பெல் வைக்கப்பட்டு உள்ளது. அதை அழுத்தினால் உடனே பஸ்சை டிரைவர் நிறுத்தி விடுவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #BusConductor #TNTransport
சென்னை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சமீபத்தில் கண்டக்டர் இல்லாத நீண்ட தூரம் செல்லும் பஸ்களை அறிமுகப்படுத்தியது.
இந்த பஸ்சில் கண்டக்டர் உடன் செல்லமாட்டார். பஸ் புறப்படும் இடத்திலேயே பயணிக்கு டிக்கெட் கொடுத்து முடித்துவிடுவார். பஸ் புறப்பட்ட பின்பு இடையில் எங்கும் நிற்காது. பயணிகளை ஏற்றாமலும், இறக்காமலும் பஸ் போய்ச்சேர வேண்டிய இடத்தில் தான் நிற்கும்.
சேலம், கோவை, திருச்சி, நெல்லை, வேலூர் ஆகிய நகரங்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் நீண்ட தூர பஸ்களில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னையில் இருந்து வேலூருக்கு கண்டக்டர் இல்லாத பஸ்கள் விடப்பட்டுள்ளது.
நிண்டதூரம் செல்லும் இந்த பஸ் இடையில் எங்கும் நிற்காமல் செல்வதால் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடிவதாக பயணிகள் வரவேற்பு தெரிவித்தனர். ஆனால் இதில் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் செய்தனர்.
சென்னையில் இருந்து வேலூருக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் 34 பஸ்கள் கண்டக்டர் இல்லாத பஸ்சாக இயக்கப்படுகிறது. கூடுதல் கட்டணம் பிரிவில் இந்த பஸ்கள் இயக்கப்படுவதால் சூப்பர் டீலக்ஸ் பஸ்களுக்கு இணையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சாதாரண பஸ்களில் கி.மீட்டருக்கு கட்டணம் 58 பைசா. ஆனால் கண்டக்டர் இல்லாத பஸ்களில் கட்டணம் கி.மீட்டருக்கு 85 பைசாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கூடுதலாக கி.மீட்டருக்கு 27 பைசா செலுத்த வேண்டும்.
சென்னையில் இருந்து வேலூர் செல்ல கண்டக்டர் இல்லாத பஸ்களில் மொத்தம் ரூ.128 வசூலிக்கப்படுகிறது. சாதாரண பஸ்களில் கட்டணம் ரூ.89 மட்டுமே. கண்டக்டர் இல்லாத பஸ்களில் கூடுதலாக ரூ.39 செலுத்த வேண்டி உள்ளது.
சென்னையில் இருந்து வேலூருக்கு ஒரு குடும்பத்தில் 4 பேர் பயணம் செய்தால் கூடுதலாக ரூ.156 செலவாகிறது. எனவே குடும்பத்தோடு பயணம் செய்பவர்களுக்கு இது கூடுதல் சுமையாக இருப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.#BusConductor #TNTransport
கோவை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழம் சார்பில் 550 புதிய பஸ் இயக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதில் 40 பஸ்கள் விரைவு போக்குவரத்து கழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது.
மீதி உள்ள 510 பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கு இடையே ஒன்டு ஒன் எக்ஸ்பிரஸ் என பல்வேறு பெயர்களில் இயக்கப்பட உள்ளது.
இதில் கோவை கோட்டத்துக்கு 150 பஸ்கள் ஒதுக்கப்பட்டு 90 பஸ்கள் தவிர 60 பஸ்கள் இயக்கத்துக்கு வந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கோவை கோட்டத்துக்கு உட்பட்ட ஈரோட்டில் இருந்து கோவைக்கு ஈரோ 100 என்ற பெயரில் கண்டக்டர் இல்லாமல் 4 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதிதாக வழங்கப்பட்டுள்ள பஸ்களில் கண்டக்டர் இல்லாமல் கோவை-சேலத்துக்கு ஒன்டு ஒன் என்ற பெயரில் 6 புதிய பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதே போல் தமிழகம் முழுவதும் பல்வேறு வழித் தடங்களில் நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்ட ஒன்டு ஒன் பஸ்கள் கண்டக்டர் இல்லாமல் இயக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கோவை கோட்ட போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது-
கோவை கோட்டத்தில் கண்டக்டர் இல்லாமல் 4 பஸ்கள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் 6 பஸ்கள் இப்போது இயக்கப்பட்டு உள்ளது. கண்டக்டர் இல்லாமல் செல்லும் பஸ்களில் தானியங்கி கதவு பொருத்தப்பட்டுள்ளது.
டிரைவரின் கட்டுப்பாட்டில் கதவுகள் மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. முன் பக்க கதவு வழியாக மட்டுமே பயணிகள் ஏறி இறங்க முடியும்.
இந்த பஸ்கள் வழியில் எங்கும் நிற்காது. பயணிகள் டிக்கெட் எடுத்தவுடன் பயணிகள் எண்ணிக்கை விவரங்களை டிரைவரிடம் தெரிவித்து விட்டு கண்டக்டர் இறங்கி விடுவார்.
இந்த பஸ்கள் வேறு எந்த இடத்திலும் நிற்காது என்பதால் கண்டக்டரின் அவசியம் இருக்காது.
கோவை கோட்டம் சார்பில் கண்டக்டர் இல்லாமல் ஈரோடு, திருச்சி, மதுரை, உள்பட பல்வேறு நகரங்களுக்கு மேலும் 90 பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கண்டக்டர் இல்லாமல் பஸ்கள் இயக்கப்படுவதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கோவையில் இருந்து சேலம் புறப்பட்டு சென்ற பஸ்சில் பயணித்த பயணிகள் கூறும்போது, சாதாரண பஸ்களில் சேலத்துக்கு 4 முதல் நான்கரை மணி நேரம் ஆகும். ஆனால் தற்போது கண்டக்டர் இல்லாமல் இயக்கப்படும் பஸ்களில் 3 மணி நேரத்தில் சென்று விடலாம்.
இதனால் ஒரு மணி நேரம் பயண நேரம் மிச்சம் ஆகிறது என்றனர். #BusConductor
கோவை:
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கோவை மண்டலம் சார்பில், கோவையில் இருந்து சேலத்துக்கு இடைநிறுத்தம் மற்றும் கண்டக்டர் இல்லாமல் 4 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. நேற்று முதல் கூடுதலாக 6 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பயணிகள் ஏறியவுடன் டிக்கெட் கொடுத்து விட்டு கண்டக்டர் இறங்கிக் கொள்வார். இடையில் எந்த நிறுத்தத்திலும் நிற்காமல் செல்வதால் பயணநேரம் மிச்சமாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கண்டக்டர்கள் இல்லாமல் பஸ்கள் இயக்கப்படுவதற்கு எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளது.
இதுதொடர்பாக சி.ஐ.டி.யு. தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கண்டக்டர் இல்லாத பஸ் சேவையை ரத்து செய்ய வேண்டும். ‘கண்டக்டர் இல்லாத பஸ் சேவை அடுப்பில்லாமல் சமைப்பதற்கு சமம்’. சிக்கனம் என்ற பெயரில் கண்டக்டர் இல்லாத பஸ் சேவையை அரசு தொடங்கி உள்ளது. ஆனால் இந்த சேவை பயன் அளிக்காது.
கண்டக்டர் இல்லாத பஸ் சேவையை ரத்து செய்ய வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சங்க ஊழியர்கள் பஸ்களை இயக்குவதற்கு முன்பு கையில் பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பிய பின்னர் பணிக்கு செல்வார்கள்.
தற்போதைய மோட்டார் வாகன சட்டத்தின்படி கண்டக்டர் இல்லாமல் பஸ்களை இயக்க முடியாது. மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்த போதுபாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது கடும் அடக்கு முறை பின்பற்றப்படுவதை, தமிழக அரசு கைவிட வேண்டும்.
போக்குவரத்து கழக மானியக் கோரிக்கையில் அரசுப் போக்குவரத்து கழகத்தை மேம்படுத்துவது, ஊழியர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பது குறித்து அமைச்சர் பேச வில்லை. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.5 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.6 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #BusConductor
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் ஏழு கோட்டங்கள், 21 மண்டலங்கள் மூலம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதியதாக நவீன குளிர்சாதன பஸ், தூங்கும் வசதி மற்றும் கழிவறை உள்ள பஸ், உள்ளிட்ட அனைத்து வசதிகள் கொண்ட பஸ்கள் வாங்கப்பட்டன. அந்த பஸ்கள் அனைத்து கோட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கண்டக்டர் இல்லாமல் 500 பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்தது. அதன்படி விழுப்புரம் கோட்டம் சார்பில் நேற்று முதல் இந்த பஸ்கள் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து விழுப்புரத்துக்கும் 8 பஸ்கள் வீதம் ஒரு நாளைக்கு 16 தடவை இயக்கப்பட்டன. இதற்கான டிக்கெட்டை விழுப்புரம் மற்றும் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெற்று கொள்ள வேண்டும்.
இந்த பஸ்கள் விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு பெருங்களத்தூரில் தான் நிற்கும். பின்னர் அங்கிருந்து கோயம்பேடு பஸ் நிலையம் வரை சென்றன. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட்டு எங்கும் நிற்காமல் விழுப்புரத்துக்கு வந்தன. எங்கும் நிற்காது என்பதால் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது,
கண்டக்டர் இல்லாமல் இயக்கப்படும் இந்த வகையான பஸ்கள் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து விழுப்புரத்துக்கும் இயக்கப்பட்டன. பயண கட்டணம் ரூ.150 ஆகும். இடையில் எங்கும் நிற்காது என்பதால் பயண நேரம் குறையும். விழுப்புரத்தில் இருந்து காலை 5 மணிக்கு முதல் பஸ்சும், இரவு 10 மணிக்கு கடைசி பஸ்சும் இயக்கப்படுகிறது. மொத்தம் ஒரு நாளைக்கு 16 தடவை 2 மார்க்கத்திலும் இருந்து இயக்கப்படுகிறது. பயணிகளின் வரவேற்பை பொறுத்து இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
இந்த புதிய பஸ்களில் 49 இருக்கைகளும், முன் புறத்தில் மட்டும் வாசல் உள்ளது. மேலும் பயணிகள் வாசலில் நின்று பயணம் செய்வதை தவிர்க்கும் பொருட்டு ஹைட்ராலிக் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. எளிதில் தீப்பற்ற முடியாத அளவுக்கு பஸ்சின் அனைத்து பகுதிகளும் தகடுகளாலும், இரும்பு கம்பியாலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.






