என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழுப்புரம் - சென்னை"

    தமிழகம் முழுவதும் கண்டக்டர் இல்லாமல் 500 பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்தது. அதன்படி விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு கண்டக்டர் இல்லாத பஸ்கள் இயக்கப்பட்டன.
    விழுப்புரம்:

    தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் ஏழு கோட்டங்கள், 21 மண்டலங்கள் மூலம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதியதாக நவீன குளிர்சாதன பஸ், தூங்கும் வசதி மற்றும் கழிவறை உள்ள பஸ், உள்ளிட்ட அனைத்து வசதிகள் கொண்ட பஸ்கள் வாங்கப்பட்டன. அந்த பஸ்கள் அனைத்து கோட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கண்டக்டர் இல்லாமல் 500 பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்தது. அதன்படி விழுப்புரம் கோட்டம் சார்பில் நேற்று முதல் இந்த பஸ்கள் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து விழுப்புரத்துக்கும் 8 பஸ்கள் வீதம் ஒரு நாளைக்கு 16 தடவை இயக்கப்பட்டன. இதற்கான டிக்கெட்டை விழுப்புரம் மற்றும் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெற்று கொள்ள வேண்டும்.

    இந்த பஸ்கள் விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு பெருங்களத்தூரில் தான் நிற்கும். பின்னர் அங்கிருந்து கோயம்பேடு பஸ் நிலையம் வரை சென்றன. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட்டு எங்கும் நிற்காமல் விழுப்புரத்துக்கு வந்தன. எங்கும் நிற்காது என்பதால் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது,

    கண்டக்டர் இல்லாமல் இயக்கப்படும் இந்த வகையான பஸ்கள் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து விழுப்புரத்துக்கும் இயக்கப்பட்டன. பயண கட்டணம் ரூ.150 ஆகும். இடையில் எங்கும் நிற்காது என்பதால் பயண நேரம் குறையும். விழுப்புரத்தில் இருந்து காலை 5 மணிக்கு முதல் பஸ்சும், இரவு 10 மணிக்கு கடைசி பஸ்சும் இயக்கப்படுகிறது. மொத்தம் ஒரு நாளைக்கு 16 தடவை 2 மார்க்கத்திலும் இருந்து இயக்கப்படுகிறது. பயணிகளின் வரவேற்பை பொறுத்து இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

    இந்த புதிய பஸ்களில் 49 இருக்கைகளும், முன் புறத்தில் மட்டும் வாசல் உள்ளது. மேலும் பயணிகள் வாசலில் நின்று பயணம் செய்வதை தவிர்க்கும் பொருட்டு ஹைட்ராலிக் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. எளிதில் தீப்பற்ற முடியாத அளவுக்கு பஸ்சின் அனைத்து பகுதிகளும் தகடுகளாலும், இரும்பு கம்பியாலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×