செய்திகள்

அப்பல்லோவில் ஆய்வு செய்யும்போது என்னையும் அழைத்து செல்ல வேண்டும்- ஜெ.தீபா

Published On 2018-07-20 07:31 GMT   |   Update On 2018-07-20 07:31 GMT
அப்பல்லோவில் வருகிற 29-ந்தேதி ஆணையம் ஆய்வு செய்யும் போது என்னையும் அழைத்து செல்ல வேண்டும் என்று ஆணையத்திடம் ஜெ. தீபா சார்பில் அவரது வக்கீல் மனு அளித்துள்ளார்.
சென்னை:

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது.

இதில் இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் அவ்வப்போது குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார்.

விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஏற்கனவே ஆஜராகி இருக்கிறார். கடந்த 10 நாட்களாக அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

வருகிற 29-ந் தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு ஆணையம் சார்பில் வக்கீல்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனும் அப்போது உடன் செல்கிறார்.

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வார்டுகள், அமைச்சர்கள் தங்கி இருந்த இடங்கள், வி.ஐ.பி.க்கள் வந்து சென்ற இடங்கள் என 10 இடங்களை ஆணையம் சார்பில் போட்டோ எடுக்க உள்ளனர்.

இந்த ஆய்வின் போது அப்பல்லோவுக்கு தன்னையும் அழைத்து செல்ல வேண்டும் என்றுஜெ.தீபா கூறி உள்ளார்.

இது குறித்து விசாரணை ஆணையத்தில் ஜெ.தீபா சார்பில் வக்கீல் சுப்பிரமணியம் கொடுத்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகிய நாங்கள் இருவரும்தான் ஜெயலலிதாவின் ரத்த உறவுகள். ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டில்தான் இதற்கு முன்பு வசித்து வந்தோம்.


ஜெயலலிதாவின் இறுதி சடங்கையும் தீபக் நடத்தினார். ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்த போது ஆஸ்பத்திரிக்குள் என்னை அனுமதிக்க மறுத்து விட்டனர்.

இப்போது ஆணையம் சார்பில் அப்பல்லோ ஆஸ்பத்திரியிலும், போயஸ் கார்டனிலும் ஆய்வு செய்ய போவதாக அறிகிறேன். இந்த ஆய்வின் போது என்னையும், எனது வக்கீலையும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டும்.

நான் ரத்த உறவு என்பதால் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வார்டை பார்வையிட அனுமதிக்க வேண்டும். ஆணையத்தில் அளிக்க கூடிய சாட்சிகள் சில உண்மை தன்மை இல்லாததால் தன்னை முக்கிய சாட்சியாக ஆணையம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

விசாரணை ஆணையத்தில் இன்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். #Jayalalithaa #Deepa
Tags:    

Similar News