செய்திகள்

கோவை, திருப்பூரில் 18 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை

Published On 2018-07-20 11:40 IST   |   Update On 2018-07-20 11:40:00 IST
லாரி ஸ்டிரைக் காரணமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 18 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. #LorryStrike

கோவை:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு, லாரிகளுக்கான இன் சூரன்சு கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கினர்.

இதையொட்டி கோவை மாவட்டத்தில் இயக்கப்படும் 10 ஆயிரம் லாரிகள் ஓட வில்லை. உக்கடம் லாரி பேட்டை மற்றும் பெட்ரோல் பங்குகள் உள்பட பல இடங்களில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கலியபெருமாள், செயலாளர் முருகேசன் ஆகியோர் கூறியதாவது:-

லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக கோவை மாவட்டத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்வது நிறுத்தப்பட்டுள்ளது. எந்திர பொருட்கள், ஜவுளிகள் உள்ளிட்ட அனைத்து சரக்குகளும் அனுப்பப்படாததால் தினமும் ரூ.100 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கும்.

எங்கள் போராட்டத்துக்கு சரக்கு வேன் உரிமையாளர்கள் உள்பட பல்வேறு சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் இந்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

முதல் நாளான இன்று கோவையில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் அதிகாலையிலேயே வந்து விட்டன. இனி வரும் நாட்களில் லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபடுவதால் காய்கறிகள் வரத்தும் பாதிக்கப்படும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கேரளாவுக்கு தினசரி காய்கறிகள், டெல்லி, குஜராத், மும்பைக்கு பேப்பர் லோடு, சென்னை. மும்பைக்கு மரப் பலகைகள் என தினசரி சரக்குகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றன. அந்த லாரிகள் இன்று முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டன.

இது குறித்து லாரிஉரிமையாளர்கள் சங்க தலைவர் எம்.கே.பொன்னுசாமி கூறியதாவது:- மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக. மேட்டுப்பாளையம் பகுதியில் மட்டும் சுமார் ரூ10 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பூர் பனியன் நகரமாக இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் உள்ளது.

திருப்பூரில் இருந்து கொச்சி, மும்பை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள துறை முகங்களுக்கு லாரிகளில் பனியன் ஏற்றி செல்லப்பட்டு அங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

மேலும் லாரிகள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு பனியன்கள் ஏற்றுமதியாகிறது.லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதால் திருப்பூர் மாவட்டத்தில் 8 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை.

இதனால் வெளி மாநிலங்களுக்கு பனியன்களை அனுப்ப முடியாமல் பனியன் நிறுவன உரிமையாளர்கள் தவித்து வருகிறார்கள். அவர்கள் ரெயில் மூலம் பனியன் பார்சல்களை அனுப்பி வருகின்றனர். இதனால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பார்சல்கள் குவிந்து உள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து தினமும் லாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு கறிக்கோழி அனுப்பப்பட்டு வந்தது. லாரி ஸ்டிரைக் காரணமாக வெளி மாநிலங்களுக்கு கறிக்கோழி அனுப்ப முடியவில்லை. இதனால் பண்ணை உரிமையாளர்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கயம் நெய் உற்பத்திக்கு பெயர் பெற்ற ஊராகும். இங்கிருந்து தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களுக்கு நெய் அனுப்பப்பட்டு வந்தது. லாரிகள் ஸ்டிரைக் காரணமாக நெய் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் கொப்பரை தேங்காய் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டு உள்ளது.

திருப்பூர் அனுப்பர் பாளையம் பாத்திர உற்பத்தி நடைபெற்று வருகிறது. லாரி ஸ்டிரைக் காரணமாக பாத்திர உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக பனியன் நிறுவன அதிபர்கள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News