உஸ்மான் ஹாதி கொலையாளிகள் இந்தியாவுக்கு தப்பி வந்ததாக கூறும் வங்கதேச காவல்துறை.. இந்தியா மறுப்பு
- இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைத் தீவிரமாக முன்வைத்தவர்
- இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாகத் டாக்கா கூடுதல் கமிஷனர் நஸ்ருல் இஸ்லாம் தெரிவித்தார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த 'இன்குலாப் மன்ச்' மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷெரீப் உஸ்மான் ஹாதி கடந்த டிசம்பர் 12-ம் தேதி தலையில் சுடப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், டிசம்பர் 18 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உஸ்மான் ஹாதி வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தவர்.
மேலும், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைத் தீவிரமாக முன்வைத்தவர் என்பதால் இவரது கொலை வங்கதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தக் கொலையில் தொடர்புடைய முக்கிய துப்பாக்கிச் சூடு நடத்திய ஃபைசல் கரீம் மசூத் மற்றும் அவரது கூட்டாளி ஆலம்கீர் ஷேக் ஆகிய இருவரும் மைமென்சிங் பகுதியில் உள்ள ஹாலுவாகாட் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாகத் டாக்கா கூடுதல் கமிஷனர் நஸ்ருல் இஸ்லாம் தெரிவித்தார்.
அவர்களுக்கு உதவி செய்த இந்தியர்களான பூர்தி மற்றும் சாமி என்பவர்களை இந்திய அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
வங்கதேச காவல்துறையின் இந்தக் குற்றச்சாட்டுகளை இந்திய எல்லை பாதுகாப்புப் படை மற்றும் மேகாலயா மாநில காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளன.
எல்லையைத் தாண்டி எவரும் உள்ளே நுழைந்ததற்கான எந்தவொரு ஆதாரமோ அல்லது தகவலோ இல்லை என்று மேகாலயா எல்லை பாதுகாப்புப் படை ஐ.ஜி ஓ.பி. உபாத்யாய் தெரிவித்துள்ளார்.
வங்கதேச அதிகாரிகள் கூறுவது போல, உதவி செய்ததாக யாரையும் தாங்கள் கைது செய்யவோ அல்லது தடுத்து வைக்கவோ இல்லை என்று மேகாலயா டி.ஜி.பி இடாஷிஷா நோங்ராங் தெளிவுபடுத்தியுள்ளார்.