செய்திகள்

ரஜினிக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2018-07-16 07:12 GMT   |   Update On 2018-07-16 07:12 GMT
பள்ளிக்கல்வித்துறையை பாராட்டிய ரஜினிக்கு அரசின் சார்பில் தனது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #Sengottaiyan #Rajinikanth
சென்னை:

சென்னை அண்ணா நகரில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளிக்கல்வித்துறையில் இன்று பல்வேறு மாற்றங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.

தமிழக மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுவதற்கு வசதியாக அரசு சார்பில் ஐ.ஏ.எஸ்.அகாடமி விரைவில் திறக்கப்பட உள்ளது. மாவட்டம்தோறும் இதை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

இதே போல சி.ஏ. படிப்பதற்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பிளஸ்-2 மாணவர்கள் முதற்கட்டமாக சி.ஏ. எழுதுவதற்கும் அரசு ஏற்பாடு செய்து வருகிறது. அடுத்த ஆண்டு 12 புதிய பாடங்களை பாடத்திட்டத்தில் இணைக்கவும் நடவடிக்கை மேற் கொண்டு வருகிறோம். வரும்ஆண்டுகளில் பிளஸ்-2 முடித்ததும் அவரவர் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் மாணவர்களின் திறமைகள் உருவாக்கப்படுகின்றன.


கே:- பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்திருக்கிறாரே?

ப:- அவருக்கு அரசின் சார்பில் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கே:- பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் எப்போது நடைபெறும்?

ப:- இன்னும் 20 நாட்களுக்குள் கவுன்சிலிங் மூலம் தேர்வு செய்து ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan #Rajinikanth
Tags:    

Similar News