செய்திகள்

கண்ணகி நகரில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய 7 ரவுடிகள் கைது

Published On 2018-07-15 07:33 GMT   |   Update On 2018-07-15 07:33 GMT
கண்ணகி நகரில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய 7 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோழிங்கநல்லூர்:

சென்னையில் குற்றச் செயல்களை தடுக்கவும், ரவுடிகளை பிடிக்கவும் போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து இரவு நேரங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி வருகிறார்கள். ரவுடிகள் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன், தெற்கு மண்டல இணை கமி‌ஷனர் மகேஸ்வரி, அடையாறு துணை கமி‌ஷனர் சே‌ஷசாயி, துரைப்பாக்கம் சரக துணை கமி‌ஷனர் லோகநாதன் ஆகியோர் மேற்பார்வையில் கண்ணகி நகர் பகுதி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த ராஜா தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ஒக்கியம், துரைப்பாக்கம் பாலம் அருகில் இன்று காலை 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேரை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் கண்ணகி நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சிவக்குமார், ஜாகீர், நடராஜன், வெங்கடேசன், காளிதாஸ், அஸ்வின்குமார் என்பது தெரிந்தது.

அவர்கள் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் தெரிந்தது. அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து பட்டாக்கத்திகள், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதிகாலையில் பட்டாக்கத்திகளுடன் சுற்றியது ஏன்? யாரையேனும் கொலை செய்ய திட்டமிட்டார்களா? என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News