நெஞ்சைத் தொடும் ஒரு காதல் கதை..!- சிறை படம் பார்த்த தினேஷ் கார்த்திக் பாராட்டு
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் வெளியான படம் 'சிறை'. இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கி இருந்தார்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவல் அதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.
நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா நடித்து இருந்தார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்து இருந்தார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். 'சிறை' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது.
'சிறை' படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலையும் குவித்தது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் 27.27 கோடி, கர்நாடகாவில் 1.05 கோடி என உலகளவில் ரூ.31.58 கோடி வசூல் குவித்துள்ளது. இப்படம் ரூ.6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே 'சிறை' படம் குடியரசு தினத்தையொட்டி நாளை ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.
இந்நிலையில், சிறை படத்தை பார்த்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,""நேற்று சிறை படம் பார்த்தேன். அருமையான படம். யதார்த்தமான மற்றும் நம் மனதுக்கு நெருக்கமான, நெஞ்சைத் தொடும் ஒரு காதல் கதை. விக்ரம் பிரபு மற்றும் அவருடன் நடித்த நடிகர்களின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது" என்றார்.