பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் - நாராயணசாமி
ஆலந்தூர்:
புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி பெங்களூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல் பட வேண்டும் என்கிற கூட்டுறவு தத்தவத்தை சொல்லி வருகிறார்.
இதைச் சொல்லித்தான் 4 ஆண்டுகளுக்கு முன்பாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. வந்த பிறகு மத்திய அரசு, மாநிலத்தின் உரிமைகளை பறிக்கின்ற செயலில் ஈடுபட்டு வருகிறது. கல்வி என்பது மாநில உரிமைக்கான சம்பந்தப்பட்டது. மத்திய அரசு அதை எடுத்து கொள்வதற்கு படிப்படியாக நீட் தேர்வை கொண்டு வந்தது. இதற்கு உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டுகிறது. இப்போது தேசிய உயர்கல்வி ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே யூ.ஜி.சி. சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தேசிய உயர்கல்வி ஆணையம் மூலமாக யூ.ஜி.சி. மற்றும் மாநிலத்தின் உறவை தடுக்க செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் மத்திய அரசுக்கு வேண்டிய மாநிலங்களுக்கு கல்வி வளர்ச்சிக்கு நிதி கொடுக்க முடியும். வேண்டாத மாநிலங்களுக்கு நிதி கொடுக்காமல் இருக்க முடியும்.
மத்திய அரசு, ஆளுனர் மற்றும் துணை நிலை ஆளுனர்களை கைப்பாவையாக வைத்துக் கொண்டு மாநில அரசின் அன்றாட செயல்பாடுகளில் தலையிடுகிறது. கூட்டாட்சி தத்துவம் வெறும் பேச்சாக இருக்கிறது. செயல்பாட்டில் இல்லை. அதனால் தான் மாநிலங்களுக்கு தனிப்பட்ட சுதந்திரம் இருக்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் சொன்னதை நான் முழுமையாக வரவேற்கிறேன்.
பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைமையில் 3-வது அணி அமைய வாய்ப்பு இருக்கிறது என்பது வெறும் வதந்தி. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது. 3-வது அணிக்கு பேச்சு இல்லை. புதுச்சேரி மாநிலத்திலும் இதே நிலைதான்.
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் என்ன பேசுகிறார் என்று தெரியாமல் பேசுகிறார். பா.ஜ.க. மதம் சார்ந்த கட்சி காங்கிரஸ் மதசார்பற்ற கட்சி காங்கிரசின் கொள்கையே அனைத்து மதத்தையும் அரவணைத்து செல்வது தான். நாங்கள் இந்து கோவிலுக்கு போவோம், மசூதிக்கு போவோம், கிறிஸ்தவ ஆலயத்திற்கும் செல்வோம். ஆனால் பா.ஜ.க. ஒரே மதம், ஒரே நாடு என்று சொல்வார்கள்.
காங்கிரசை விமர்சிப்பதற்கு பா.ஜ.க.விற்கு எந்த தகுதியும் அருகதையும் கிடையாது. புதுவை கவர்னர் கிரேண்பேடி என்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டு தான் செயல்படுகிறேன் என்று சொல்லி வருகிறார்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. தீர்ப்பு வந்த பிறகுதான் அவருடைய அதிகாரத்தை பற்றி தெரியும். கிரேண்பேடி தலையிட்டால் புதுவை மாநிலத்தில் வளர்ச்சிக்கான பணிகள் எதுவும் தடைப்படவில்லை. தாமதம் தான் ஆகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #Parliamentelections #Narayanasamy