செய்திகள்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறப்பில் எந்த மர்மமும் இல்லை- பழ.நெடுமாறன்

Published On 2018-07-10 04:39 GMT   |   Update On 2018-07-10 04:39 GMT
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பில் எந்த மர்மமும் இல்லை என்று தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.
தஞ்சாவூர்:

'2016 டிசம்பர் 5-ன் சந்தேகங்கள்' என்ற நூல் அறிமுக விழா தஞ்சையில் நடைபெற்றது. விழாவுக்கு உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார்.

இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-

தமிழக அரசு நம் நாட்டில் இயற்கை வளங்களை அழிக்கும் திட்டத்தை எதிர்த்து யார் குரல் கொடுத்தாலும் அல்லது போராடினாலும் அவர்களை ஒடுக்குவதற்கு முயற்சி செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்ட எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு, எரிவாயு எதிர்ப்பு போராட்டம் என எந்த போராட்டமாக இருந்தாலும் அவை மக்களால் உருவாக்கப்படுகின்றன. இதற்காக குரல் கொடுக்கிற கட்சிகளையோ அல்லது அமைப்புகளையோ ஒடுக்குவதற்கு முயற்சி செய்வது ஒருபோதும் வெற்றி பெறாது, அவ்வாறு ஒடுக்க நினைத்தால் மிகப்பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதற்கு தூத்துக்குடி போராட்டம் எடுத்துக்காட்டு என்பதை அரசு தெரிந்து கொள்ள வேண்டும்.


மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து போது, புதுடெல்லியில் இருந்து எய்ம்ஸ் டாக்டர்கள், சிங்கபூர், லண்டனில் இருந்து டாக்டர்கள் என பெரிய டாக்டர்கள் கூட்டமே வந்து அவரது உடலை பரிசோதித்தது. அப்போது தேவையான சிகிச்சையை அவர்கள் அளித்தனர். இதில் எந்த மர்மமும் இல்லை.

இது பற்றி விரிவான தகவல் டிசம்பர் 5-ன் சந்தேகங்கள் என்ற நூலில், ஆசிரியர் விரிவாக குறிப்பிட்டுள்ளார். லோக் ஆயுக்தா சட்டம் நீண்ட காலத்துக்கு முன்பே தமிழகத்தில் அமல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இந்த சட்டம் தற்போது தாமதமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போதாவது இந்த லோக் ஆயுக்தா சட்டத்தை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #Jayalalithaa #PazhaNedumaran
Tags:    

Similar News