செய்திகள்

கழிவறை, படுக்கை வசதியுடன் கூடிய அரசு சொகுசு பேருந்தில் கட்டணம் எவ்வளவு?

Published On 2018-07-04 06:07 GMT   |   Update On 2018-07-04 06:07 GMT
கழிவறை, ஏசி, படுக்கை வசதியுடன் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட அரசு சொகுசு பேருந்துக்கான கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. #TNSTC #SETC #TransportDept
சென்னை:

அரசு பஸ்களில் இருக்கை வசதிகள், கைபிடிகள், கூரைகள், பக்கவாட்டு கண்ணாடிகள் போன்றவை உடைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் பயணம் செய்ய தயங்கினர். இதனால் அரசு போக்குவரத்து கழகத்துக்கு டீசல் செலவை ஈடுகட்ட முடியாத அளவுக்கு நஷ்டம் அதிகரித்து வந்தது.

புதிய பஸ்களை அறிமுகம் செய்தால் மட்டுமே போக்குவரத்து கழகத்துக்கு வருவாயை பெருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஆதலால் முதலில் 2 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்குவதற்கு அரசு நிதி ஒதுக்கியது.

இதையடுத்து புதிய பஸ்களின் கட்டுமானப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு நேற்று முதல் கட்டமாக 515 புதிய பஸ்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். புதிய பஸ்களில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளனர். தனியார் ஆம்னி பஸ்சுக்கு இணையான அனைத்து வசதிகளும் இவற்றில் உள்ளன.

படுக்கை வசதி, கழிப்பிட வசதி, சி.சி.டி.வி. கேமரா, சொகுசு இருக்கைகள், உள்ளிட்ட பல வசதிகள் பயணிகளுக்கும், டிரைவருக்கும் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


புதிய பஸ்கள் 8 போக்குவரத்து கழகங்களுக்கும் பிரித்து ஒதுக்கப்பட்டன. அதில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 40 பஸ்கள் முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் சென்னையில் இருந்து 18 பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.

சென்னையில் இருந்து ஏ.சி. படுக்கை வசதி பஸ்கள் 6 நகரங்களுக்கு விடப்பட்டுள்ளது. புதிய சொகுசு பஸ்களுக்கு 3 வகையான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏ.சி. படுக்கை வசதி பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு ரூ.2 வீதம் கட்டணமும், குளிர்சாதன வசதி அல்லாத படுக்கை வசதிக்கு கிலோ மீட்டருக்கு ரூ.1.55-ம், அல்ட்ரா டீலக்ஸ் ஏ.சி இருக்கை வசதி பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு ரூ.1.30-ம், ஏ.சி. வசதி அல்லாத அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் வீதமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து மதுரைக்கு ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.975, சேலம் ரூ.725, போடிநாயக்கன்பட்டி ரூ.1110, ஈரோடு ரூ.905, கரூர் ரூ.820 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவை-பெங்களூர் இடையே இயக்கப்படும் ஏ.சி. படுக்கை வசதி பஸ்சுக்கு ரூ.805 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 6 நகரங்களுக்கு ஏ.சி. படுக்கை வசதி பஸ் நேற்று முதல் இயக்கப்படுகிறது.

சென்னை-மதுரை ஏ.சி வசதி அல்லாத படுக்கை வசதிக்கு ரூ.725, சென்னை- திண்டுக்கல் இடையே விடப்பட்டுள்ள கழிப்பிட வசதியுள்ள அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சுக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 100 புதிய பஸ்கள் ஒதுக்குகிறார்கள். அதில் 40 ஏ.சி. படுக்கை வசதி பஸ்களாகும், 50 அல்ட்ரா டீலக்ஸ் (யூ.டி) பஸ்களில், 10 கழிவறை வசதி கொண்ட அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களாகும். இவற்றில் முதல் கட்டமாக 40 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்டு மாதத்துக்குள் மீதமுள்ள பஸ்கள் வந்து விடும். நீண்டதூரம் செல்லக்கூடிய பஸ்களில் பயணிகளுக்கு வசதிகளை செய்து கொடுத்தால் அதிகளவு பயணிப்பார்கள். புதிய சொகுசு பஸ்கள் விடப்பட்டதால் இனி பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார். #TNSTC #SETC #TransportDept
Tags:    

Similar News