செய்திகள்

ராயப்பேட்டையில் காவலரை வெட்டிய ரவுடி ஆனந்தன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

Published On 2018-07-03 16:27 GMT   |   Update On 2018-07-03 16:59 GMT
சென்னை ராயப்பேட்டையில் காவலர் ராஜவேலுவை வெட்டிய ரவுடி ஆனந்தன் இன்று என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Chennai #Encounder
சென்னை:

சென்னை ராயப்பேட்டை பி.எம்.தர்கா குடிசைப் பகுதியில் ஒரு கும்பல் தகராறில் ஈடுபடுவதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் தகவல் வந்தது.

இதனையடுத்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ராஜவேலு உடனடியாக அங்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு சில இளைஞர்கள் கும்பலாக சேர்ந்து மது அருந்தி விட்டு ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். போலீஸ்காரர் ராஜவேலு  அவர்களை எச்சரித்தார். உடனடியாக கலைந்து செல்லுமாறு கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல் திடீரென ராஜவேலுவை தாக்கியது. அவரை பார்த்து தனியாகத்தான் வந்துள்ளான். போட்டு தள்ளுங்கடா என்று கூறிய படியே போலீஸ்காரர் ராஜவேலுவை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. அவர்களிடம் இருந்து ராஜவேலு  தப்பிக்க முயன்றார். ஆனால் விடாமல் அக்கும்பலை சேர்ந்தவர்கள் தொடர்ந்து தாக்கினர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவுடி ஆனந்தன் போலீஸ்காரர் ராஜவேலுவை அரிவாளால் சரமாரியாக வெட்டினான். இதில் அவரது தலையில் 16 இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டது. இடது காது, கன்னம் ஆகிய இடங்களிலும் வெட்டு விழுந்தது. உடனடியாக ரவுடி ஆனந்தனும் கூட்டாளிகளும் தப்பி சென்று விட்டனர்.

இதனை தொடர்ந்து ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ்காரர் ராஜவேலு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் தையல் போடப்பட்டுள்ளது. டாக்டர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இச்சம்பவம் தொடர்பாக ரவுடி ஆனந்தன் அவனது கூட்டாளிகள் ஜிந்தா, அஜித், வேல்முருகன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், போலீசாரிடம் இருந்து ரவுடி ஆனந்தன் தப்பிச்சென்றதாகவும், அவரை பிடிக்கும் முயற்சியில் அவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவரது சடலம் ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Tags:    

Similar News