செய்திகள்

சென்னையில் இருந்து கனடாவுக்கு போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற 19 பேர் கைது

Published On 2018-07-03 04:11 GMT   |   Update On 2018-07-03 04:11 GMT
சென்னையில் இருந்து ஜெர்மனி வழியாக கனடாவுக்கு போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற 3 பெண்கள் உள்பட 19 பேரை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து ஜெர்மனி செல்லும் விமானத்தில் குஜராத், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 19 பேர் குழுவாக செல்ல வந்திருந்தனர்.

அவர்கள் குடியுரிமை சோதனைக்கு வந்தபோது, சந்தேகம் அடைந்த குடியுரிமை அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது ஜெர்மனி சென்று அங்கிருந்து கனடா நாட்டுக்கு சினிமா படப்பிடிப்பில் கலந்துகொள்ள செல்லவதாக கூறினார்கள். ஆனால் குழுவில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள்.

கடந்த சில மாதங்களாக சினிமா படப்பிடிப்பு என்ற பெயரில் போலி பாஸ்போர்ட்டில் குழுக்களாக சென்று வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதாக புகார்கள் வருவதால், குடியுரிமை அதிகாரிகள் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது 19 பேரின் பாஸ்போர்ட்களும் போலியானது என்று தெரியவந்தது.

அவர்கள் ஜெர்மனி சென்று அங்கிருந்து கனடா நாட்டுக்கு வேலைக்கு செல்ல ஏஜெண்டுகளிடம் பணம் தந்து ஏமாந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஏஜெண்டுகள் பற்றி குடியுரிமை அதிகாரிகள் விசாரித்தனர்.

ஆனால் ஏஜெண்டுகள் பற்றி எந்தவித துப்பும் கிடைக்காததால் 19 பேரின் விமான பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர். 19 பேரும் கைது செய்யப்பட்டு, சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குற்றப்பிரிவு போலீசார், இதன் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி விசாரித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் குற்றப்பிரிவு போலீசார் போலி பாஸ்போர்ட் தயாரித்து குழுக்களாக அனுப்பிய கும்பலை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Tags:    

Similar News