வழிபாடு

பித்ரு சாபம் நீக்கும் பீஷ்மாஷ்டமி

Published On 2026-01-25 13:15 IST   |   Update On 2026-01-25 13:15:00 IST
  • மகாபாரத யுத்த களத்தில் அம்புகளால் துளைக்கப்பட்ட நிலையில், அம்பு படுக்கை மீது இருந்தார், பீஷ்மர்.
  • ஒருவர், தான் செய்த பாவத்தை உணர்ந்து வருந்தும் போதே அந்தப் பாவம் அகன்றுவிடும்.

மகாபாரத யுத்த களத்தில் அம்புகளால் துளைக்கப்பட்ட நிலையில், அம்பு படுக்கை மீது இருந்தார், பீஷ்மர். அவர் தன் தந்தையிடம் இருந்து, விரும்பும் சமயத்தில் மரணிக்கும் வரத்தைப் பெற்றிருந்தார். இருப்பினும் அவருடைய உடல் வேதனையில் துடித்தது.

அப்போது அங்கு வந்த வியாசரிடம், "நான் செய்த பாவம் என்ன? எதற்காக என் உடல் இவ்வளவு வேதனையில் இருக்கிறது? என்று கேட்டார்.

அதற்கு வியாசர், "ஒருவர் தீமை செய்யாவிட்டாலும், தன் முன்பாக நடக்கும் தீமையை தடுக்காமல் இருப்பதும் பாவம் தான். அதற்கான தண்டனையை அவர் அனுபவித்தே ஆகவேண்டும்" என்றார். இப்போது பீஷ்மருக்கு புரிந்துவிட்டது.

துரியோதனன் சபையில் பாஞ்சாலிக்கு அநீதி நிகழ்ந்தபோது, அதனை தடுக்காததன் விளைவுதான் இது என்பதை உணர்ந்தார்.

பின்னர் வியாசரிடம், "இதற்கு என்ன பிராயச்சித்தம்?" என்று கேட்டார்.

"ஒருவர், தான் செய்த பாவத்தை உணர்ந்து வருந்தும் போதே அந்தப் பாவம் அகன்றுவிடும். ஆனால், பாஞ்சாலி காப்பாற்றும்படி கதறியபோது, கண்டும் கண்டு கொள்ளாதபடி இருந்த உன்னுடைய கண்கள், செவி, வாய், தோள், கைகள் ஆகியவற்றிற்கு தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் என்பது விதி. அதைத்தான் இப்போது அனுபவிக்கிறாய்" என்றார் வியாசர்.

பின்னர் "வேதனையை சுட்டெரிக்க சூரியனின் அனுக்கிரகம் தேவை" என்று கூறிய வியாசர், தன்னிடம் இருந்த எருக்கம் இலைகளைக் கொண்டு, பீஷ்மரின் அங்கங்களை அலங்கரித்தார். இதனால் வேதனை குறைந்து, மன அமைதி அடைந்த பீஷ்மர் முக்தியை அடைந்தார். அவர் மரணித்த தினமே 'பீஷ்மாஷ்டமி' என்று அழைக்கப்படுகிறது.

"ஒழுக்கம் தவறாத பிரம்மச்சாரியான பீஷ்மருக்காக இந்த தேசமே பித்ரு கடன் செய்யும்" என்றார், வியாசர்.

அதன்படி பீஷ்மாஷ்டமி அன்று, புனிதநீர் நிலைகளுக்குச் சென்று, தர்ப்பணம் செய்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்த ஆண்டு பீஷ்மாஷ்டமி  தினம் நாளை (திங்கட்கிழமை) வருகிறது. இந்த நாளில் பீஷ்மருக்கான தர்ப்பணமும், நம் முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிச்சயம் அமையும் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News