செய்திகள்

காரைக்குடியில் தனியார் நிறுவன அதிகாரி காருடன் கடத்தல்: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Published On 2018-06-25 16:32 IST   |   Update On 2018-06-25 16:32:00 IST
தனியார் நிறுவன அதிகாரியை மர்ம நபர்கள் காருடன் கடத்தி அவரிடம் இருந்த செல்போன், பணம், ஏ.டி.எம். கார்டுகளை பறித்து அவரை கீழே தள்ளி விட்டு தப்பி சென்றனர்.

சிவகங்கை:

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் சங்கர்தாஸ் (வயது33). இவர் பிரபல கார் கம்பெனியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

நேற்று தனது காரில் வெளியில் சென்று விட்டு இரவு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வழியாக ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

திருப்பத்தூர் அருகே உள்ள நாச்சியார்புரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் திடீரென காரை மறித்தனர்.

பின்னர் அந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சங்கர்தாசை சரமாரியாக தாக்கியது. கை-கால்களை கயிற்றால் கட்டி காரின் பின் இருக்கையில் போட்டு காருடன் அவரை கடத்தினர்.

சங்கர்தாசிடம் இருந்து செல்போன், பணம், ஏ.டி.எம். கார்டுகளை பறித்துக்கொண்டனர். பின்னர் மயக்கத்தில் இருந்த அவரை மதுரை மாவட்டம் பொட்டச்சிபட்டி அருகே அந்த கும்பல் கீழே தள்ளி விட்டு காருடன் தப்பியது.

மயங்கி கிடந்த அவரை அப்பகுதியினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சுய நினைவு திரும்பிய சங்கர்தாஸ் கார் கடத்தியது குறித்து நாச்சியார்புரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்விகீதா வழக்குப்பதிவு செய்து காரை கடத்திய கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News