செய்திகள்

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை: போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை

Published On 2018-06-23 17:26 GMT   |   Update On 2018-06-23 17:26 GMT
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டினால் வாகன உரிமையாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அதிகாரி எச்சரித்துள்ளார்.
பெரம்பலூர்:

பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கும், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, சுற்றுலா வேன் ஆகியவற்றின் டிரைவர்களுக்கும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி(பொறுப்பு) ஜெய்தேவராஜ் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செல்வராஜ், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி (பொறுப்பு) ஜெய்தேவராஜ் பேசியதாவது:-

மோட்டார் வாகன சட்டத்தின் படி 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது. அதை மீறி 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஓட்டினால் வாகன உரிமையாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்ல ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரியின் அனுமதி பெற வேண்டும். மேலும் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு தான் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்ல வேண்டும். அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மது அருந்தி விட்டும், செல்போன் பேசிக்கொண்டும் வாகனங்களை ஓட்டக்கூடாது. 

அப்படி ஓட்டுபவர்களின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் துறைமங்கலத்தில் இருந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு நேரிடையாக ஷேர் ஆட்டோ இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி டிரைவர்கள் வாகனங்களை ஓட்டி விபத்தில்லா பெரம்பலூராக மாற்ற வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News