செய்திகள்

செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் திட்டம் அமலுக்கு வந்தது- மீண்டும் தவறு செய்தால் 6 மாதம் ஜெயில்

Published On 2018-06-23 12:11 IST   |   Update On 2018-06-23 12:11:00 IST
ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுப்பவர்களிடம் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் மீண்டும் தவறு செய்தால் 6 மாதம் ஜெயில் தண்டனை என்றும் ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. #RailwayStation #Selfie #Fine
சென்னை:

இளைஞர்களிடம் செல்போன் மூலம் ‘செல்பி’ எடுக்கும் மோகம் அதிகரித்தப்படி உள்ளது.

‘செல்பி’ எடுத்து அவற்றை உடனுக்குடன் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்பவர்கள், ஓடும் ரெயிலிலும் வாசலில் நின்று பயணம் செய்து கொண்டே செல்பி எடுக்க தவறுவதில்லை.

சில பயணிகள் ரெயில் நிலையங்களில் தூரத்தில் ரெயில் வரும் போது, அந்த காட்சியை பின்னணியாகக் கொண்டு செல்பி எடுக்கிறார்கள். இத்தகைய செல்பி மோகத்தால் ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் அடிக்கடி விபத்து நடக்கிறது.

இந்த செல்பி விபத்துகளை தடுக்க தென்னக ரெயில்வே சில திட்டங்களை அமல்படுத்தியது. அதற்கு பலன் கிடைக்காததால், ஓடும் ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் செல்பி எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

ரெயில் பெட்டிகளின் வாசல்களிலும், ரெயில் என்ஜின் முன்பும் நின்று செல்பி எடுப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. சேலம் டிவிசனில் இந்த அபராத திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்பி எடுக்கும் பயணிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீப காலமாக இளைஞர்கள் மட்டுமின்றி பெண்கள் மற்றும் வயதானவர்களும் கூட செல்பி மோகத்தில் சிக்கியுள்ளனர்.

ரெயில் பயண நினைவுகளை படமாக்க சிலர் செல்பி எடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். முதலில் பயணிகளை எச்சரிக்கை செய்யவும், பிறகு அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரே பயணி மீண்டும், மீண்டும் செல்பி எடுத்து பிடிபட்டால் அவருக்கு அபராதத்துடன் 6 மாதம் சிறை தண்டனை வாங்கிக் கொடுக்கவும் அந்த சுற்றறிக் கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக் கையைத் தொடர்ந்து நேற்று முதல் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கும் திட்டம் அமலுக்கு வந்தது.

முதல் நாள் என்பதால் நேற்று செல்பி எடுத்த பயணிகள் எச்சரித்து விடுக்கப்பட்டனர். இன்று முதல் அபராதம் விதிக்கப்படுகிறது.#RailwayStation #Selfie #Fine
Tags:    

Similar News