செய்திகள்

சேலத்தில் விடுதியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-06-21 17:13 GMT   |   Update On 2018-06-21 17:13 GMT
சேலத்தில் விடுதியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னங்குறிச்சி:

சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள கோரிமேட்டில் அரசினர் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த கனகராஜ் மகள் மஞ்சு(வயது 20) என்பவர் 2-ம் ஆண்டு நுண்ணுயிரியல் படித்து வந்தார்.

இவர் கல்லூரி விடுதியிலேயே தங்கியிருந்து படித்து வந்தார். நேற்று இரவு மஞ்சு தனது அறையில் இருந்தார். அப்போது அதே அறையில் தங்கியிருக்கும் சக மாணவிகள் அவரை சாப்பிட வருமாறு அழைத்தனர். இதற்கு அவர் தனக்கு உடல்நலம் சரியில்லை என்றும் வரும் போது மோர் மட்டும் கொண்டு வருமாறும் கூறி உள்ளார்.

பின்னர் சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு மாணவிகள் திரும்பி வந்தனர். அப்போது அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. மாணவிகள் கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக அறைக்குள் எட்டி பார்த்தனர். அப்போது கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மஞ்சு பிணமாக கிடந்தார்.

இதை பார்த்து மாணவிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இதுகுறித்து உடனடியாக கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் மாணவியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக மஞ்சுவின் உடலை பார்த்து சக மாணவிகள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. மேலும் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News