செய்திகள்

புதுக்கோட்டை அருகே அரசு பள்ளிக்குள் புகுந்த பாம்புகள்: அதிர்ச்சியில் மாணவிகள் மயக்கம்

Published On 2018-06-20 12:12 GMT   |   Update On 2018-06-20 12:12 GMT
அரசு பள்ளிக்குள் புகுந்த பாம்புகளால் மாணவிகள் அதிர்ச்சியில் மயக்கம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குப்பத்துப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவிகள் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து படித்து கொண்டிருந்தனர். அந்த மரத்தில் மூன்று பச்சை பாம்புகள் பின்னி விளையாடி கொண்டிருந்தன.

இந்நிலையில் மரத்தடியில் இருந்த 5-ம் வகுப்பு மாணவிகள் குப்பத்துபட்டியை சேர்ந்த மணிமேகலை (வயது10). கங்காதேவி (10), பாண்டிமீனாள் (10) மகேஸ்வரி (10) சிவஜோதி (10) ஆகிய மாணவிகள் மீது அந்த பாம்புகளில் இருந்து கசிந்த திரவம் விழுந்தது. திரவம் பட்ட இடத்தில் அரிப்பு ஏற்பட்டதால் மாணவிகள் பீதியடைந்து மயக்கம் வருவதாக ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.

உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மரத்தின் மீது பார்த்தபோது மூன்று பாம்புகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் பாம்புகளை கொன்று எடுத்துக்கொண்டு மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பாம்புகளை டாக்டர்களிடம் காண்பித்தனர்.

மாணவிகளுக்கு உடனடி சிகிச்சை அளித்ததுடன், ரத்த பரிசோதனைகளும் செய்யப்பட்டன. மேலும் மாணவிகளை பரிசோதித்த டாக்டர்கள் மாணவிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லையென தெரிவித்தனர். மாணவிகள் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News