செய்திகள்

நீலகிரி பஸ் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்-அமைச்சர் உத்தரவு

Published On 2018-06-14 22:09 GMT   |   Update On 2018-06-14 22:09 GMT
நீலகிரி சாலை விபத்தில் பலியான 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். #NilgiriBusAccident #EdappadiPalanisamy
சென்னை:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டம் கேத்தி கிராமம் அருகே இன்று (நேற்று) காலை உதகையில் இருந்து குன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ், மந்தாடா என்ற இடத்திற்கு அருகில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சாலை விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தகவல் கிடைத்தவுடன் பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்சில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு, சிறப்பான சிகிச்சை அளிக்க நீலகிரி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டேன். எனது உத்தரவின் பேரில் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, வருவாய் துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைவாக சென்று, மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொண்டனர். காயமடைந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த சாலை விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.  #NilgiriBusAccident #EdappadiPalanisamy #tamilnews
Tags:    

Similar News