செய்திகள்

திருமங்கலம் அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி மறியல்

Published On 2018-06-11 17:29 IST   |   Update On 2018-06-11 17:29:00 IST
சாலையை சீரமைக்க வலியுறுத்தி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் இருந்து போல்நாயக்கன்பட்டிக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு பூமிபூஜை நடைபெற்றது.

உடனடியாக அங்கு சல்லி கற்கள் பரப்பப்பட்டன. அத்தோடு பணி நின்றுவிட, பொதுமக்கள் அவதிக்கு ஆளானார்கள். கடந்த ஒரு மாத காலமாக அந்த வழியே சென்று வந்த மாணவ -மாணவிகள் சாலையில் நடக்க முடியாமல் தவித்தனர்.

கர்ப்பிணி பெண்கள், இருசக்கர வாககனங்களில் செல்வோர் சறுக்கி விழுந்து காயம் அடைந்தனர். ஆனாலும் சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை திருமங்கலம-உசிலம்பட்டி சாலையில் சாத்தங்குடி விலக்கில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறியல் குறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகளும், போலீசாரும் விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags:    

Similar News