செய்திகள்

ஸ்டெர்லைட் வழக்கு கோர்ட்டில் உள்ளதால் சட்டசபையில் பேசுவது மரபல்ல - முதல்-அமைச்சர் விளக்கம்

Published On 2018-06-07 08:50 GMT   |   Update On 2018-06-07 08:50 GMT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு கோர்ட்டில் உள்ளதால் சட்டசபையில் பேசுவது மரபல்ல என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
சென்னை:

சட்டசபையில் இன்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சம்பவம் குறித்து சில கருத்துக்களை கூறினார். அவரது பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

இதுகுறித்து இறுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-



ஸ்டெர்லைட் பிரச்சனை சம்பந்தமாக நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து முழு விசாரணை மேற்கொள்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள் தலைமையிலே விசாரணை தொடங்கப்பட்டு, தற்போது விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த பிரச்சனை குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கும் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆகவே, நீதிமன்றத்திலே வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு சம்பவத்தை பற்றி, பொருளைப் பற்றி, அவையிலே விவாதிப்பது, மரபல்ல. தி.மு.க. ஆட்சியிலே, அப்பொழுது அமைச்சராக இருந்து, தற்போது தி.மு.க.வின் சட்டமன்ற துணைத்தலைவராக இருக்கின்ற மரியாதைக்குரிய துரைமுருகனே, இதைப்பற்றி சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

நீதிமன்றத்திலே வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு பொருளைப் பற்றி அவையிலே பேசுவது மரபல்ல என்ற ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றார். அதன் அடிப்படையிலே, எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும், எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், இது தொடர்பாக விசாரணை கமி‌ஷனிலே அளிக்கலாம் என்பதை தங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Tags:    

Similar News