செய்திகள்

மதிப்பெண் குறைந்ததால் பிளஸ்-1 வகுப்பில் சேர முடியாமல் மாணவர்கள் தவிப்பு

Published On 2018-06-04 09:29 GMT   |   Update On 2018-06-04 09:29 GMT
10-ம் வகுப்பு தேர்வில் எதிர்பார்த்த அளவுக்கு மார்க் கிடைக்காததால் பிளஸ்-1 வகுப்பில் சேர முடியாமல் மாணவர்களும், பெற்றோர்களும் திண்டாடுகின்றனர்.
சென்னை:

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு கடந்த 23-ந்தேதி வெளியானது. தேர்வு எழுதிய 9.5 லட்சம் மாணவர்களில் 8.97 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

கடந்த காலங்களை ஒப்பிடும்போது இந்த வருடம் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததால் மாணவ- மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற முடியாமல் போனது. பொதுவாக கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்களில் எளிதாக 100-க்கு 100 பெறுவார்கள்.

ஆனால் இந்த வருடம் எத்தனை மணவர்கள் பாட வாரியாக தேர்ச்சி பெற்றார்கள் என்ற விவரத்தை தேர்வுத்துறை வெளியிடவில்லை. அதற்கு பதிலாக சதவிகிதம் அடிப்படையில் தேர்ச்சியை குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த வருடம் கணிதம், சமூக அறிவியல், அறிவியல் பாடங்களில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்ததால் ‘சென்டம்’ பெறக்கூடிய மாணவர்கள் வாய்ப்பை இழந்தனர்.

அதேபோல பெரும்பாலான மாணவர்கள் 300 முதல் 400 மதிப்பெண்கள்தான் பெற முடிந்தது. 400-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. மேலும் 200 முதல் 300 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

10-ம் வகுப்பு தேர்வில் எதிர்பார்த்த அளவுக்கு மார்க் கிடைக்காததால் பிளஸ்-1 வகுப்பில் சேர முடியாமல் மாணவர்களும், பெற்றோர்களும் திண்டாடுகின்றனர். தாங்கள் படித்த அதே பள்ளியில் பிளஸ்-1 வகுப்பை தொடர்வதற்கு விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காமல் தவிக்கின்றனர்.

தாங்கள் படித்த பள்ளியில் இடம் கிடைக்காத மாணவர்கள் வேறு பள்ளிகளை நோக்கி செல்கிறார்கள். கணிதப் பாடப்பரிவு, அறிவியல், வணிகவியல் பாடப்பிரிவுகளில் சேர போதிய மார்க் இல்லாததால் ஒவ்வொரு பள்ளிகளாக ஏறி இறங்குகிறார்கள்.

தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தாங்கள் கேட்கிற பாடப்பிரிவு கிடைக்கவில்லை என்று மாணவர்கள் ஆதங்கப்படுகிறார்கள். அரசு பள்ளிகளிலும் குறிப்பிட்ட பாடப் பிரிவுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. #Tamilnews
Tags:    

Similar News