செய்திகள்

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை: குறுக்கு விசாரணையின் போது தீபக் பதில்

Published On 2018-06-02 23:22 GMT   |   Update On 2018-06-02 23:22 GMT
ஜெயலலிதாவை சசிகலா பாசமாக பார்த்துக்கொண்டார் என்றும், அவரது மரணத்தில் சந்தேகம் இல்லை என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் விசாரணை ஆணையத்தில் பதில் அளித்துள்ளார். #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission
சென்னை:

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆணையத்தில் ஏற்கனவே ஆஜராகி சாட்சியம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்.

அதன்படி, ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது அவரிடம் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம்(இவர், தற்போது கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆணையராக உள்ளார்), ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோரிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.



தீபா குறித்து ஏற்கனவே ஆணையத்தில் அளித்திருந்த வாக்குமூலம் தொடர்பாக தீபக்கிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்த போது, தீபா ஜெயலலிதாவை எதிர்த்து பேசியதால் அவரை ஜெயலலிதாவுக்கு பிடிக்காமல் போனதாகவும், இதன்காரணமாக அவரை போயஸ் கார்டனுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சசிகலா குறித்து கேள்வி எழுப்பிய போது, சசிகலாவையும் அத்தை என்று தான் அழைப்பேன் என்றும், சசிகலா மிகப்பிரியமாக பாசமாக ஜெயலலிதாவை பார்த்துக்கொண்டார் என்றும் கூறி உள்ளார்.

மேலும், 4.12.2016 அன்று மாலை 4.30 மணிக்கு ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை என்றும், ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் குறுக்கு விசாரணையின் போது பதில் அளித்துள்ளார்.



குறுக்கு விசாரணை முடிவடைந்து ஆணையத்தில் இருந்து வெளியே வந்த பூங்குன்றன் நிருபர்களிடம், ‘குறுக்கு விசாரணையின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன் என்றார்.

குறுக்கு விசாரணை முடித்துக்கொண்டு வெளியே வந்த வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, ‘ஜெயலலிதா பேசிய ஆடியோவை ஆணையம் வெளியிட்டது அதிர்ச்சியாகவே இருந்தது. ஆணையம் ஒரு முடிவு எடுக்கும்போது அதில் தலையிட முடியாது.

ஆணையம் அனைத்து தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடித்த பின்பு தான் நாங்கள் யார், யாரை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்போம். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்களில் முக்கியமானவர்கள் எய்ம்ஸ் மருத்துவர்கள். அவர்களைத் தான் ஆணையம் முதலில் விசாரித்து இருக்க வேண்டும். இதுவரை அவர்களை விசாரிக்கவில்லை. இருந்தபோதிலும் அதற்கான காலம் ஆணையத்துக்கும் உள்ளது. எங்களுக்கும் உள்ளது’ என்றார்.

ஜெயலலிதாவின் உதவியாளர் கார்த்திகேயன் ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். அவரிடம் ஏற்கனவே சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்தினார். இந்தநிலையில் மீண்டும் விசாரணைக்காக அழைக்கப்பட்டதை தொடர்ந்து கார்த்திகேயன் நேற்று ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் ஆணையத்தின் வக்கீல் மதுரை பார்த்தசாரதி பல்வேறு கேள்விகளை கேட்டார். அவர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் கார்த்திகேயன் பதில் அளித்துள்ளார்.

விசாரணையின் போது அவர், சசிகலா மூலம் தான் ஜெயலலிதாவின் உதவியாளராக பணியில் சேர்ந்ததாகவும், ஜெயலலிதா, சசிகலாவை சொல்வதை மட்டும் தான் செய்வேன் என்று கூறி உள்ளார். அதற்கு ஆணையத்தின் வக்கீல், ஜெயலலிதா தற்போது உயிரோடு இல்லை. அப்படியென்றால் தற்போது சசிகலா சொல்வதுபடி தான் செயல்படுவீர்கள், செயல்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால் சரிதானா என்று கேட்டார். அதற்கு ஆமாம் என்று பதில் அளித்த கார்த்திகேயன், தனக்கு சசிகலா தான் சம்பளம் கொடுப்பதாகவும் கூறி உள்ளார்.

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் மேற்கொண்டு விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆணையத்தின் வக்கீல், நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு நீதிபதி அனுமதி அளித்தார். இதைத்தொடர்ந்து பூங்குன்றனை வேறொரு தேதியில் மீண்டும் விசாரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.  #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission 
Tags:    

Similar News